பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வேலூர்ப் புரட்சி


அப்பனும் பிள்ளையும் செய்த தீங்குகளத்தனையும் ஒன்று திரண்டு திரும்பிவந்து தாக்கும் காலம் ஆர்க்காட்டு அரண்மனைக்கு நெருங்கிவிட்டது. காலம் பார்த்துக் காத்திருக்கும் கொக்குபோல் தக்க தருணத்தை எதிர் நோக்கி இருந்தது கும்பினி அரசாங்கம். சீரங்கப்பட்டணம் வீழ்ந்தது. திப்பு இறந்தான். மைசூர் அரண்மனையிலிருந்த ஆவணங்கள் அலசி ஆராயப்பட்டன. அதன் விளைவாக உமதுக்-உல்-உமாராவுக்கும் திப்புவுக்கும் இடையே கள்ள நட்பு இருந்ததென்று ஊகிக்கப்பட்டது. இந்த ஊகத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் பல இருந்தன. ஆயினும் கும்பினி அரசாங்கம் அதைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளவில்லை. நல்ல நாயைக் கொல்லுவதானாலும் அதற்கு வெறி பிடித்ததெனப் பழி சுமத்திக் கொன்றால் தவறில்லை என்று கருதும் அறவோர்கள் அல்லவா கும்பினி ஆட்சியாளர்கள்? எனவே திப்புவுக்கும் உமதத்-உல்உமாராவுக்குமிடையே கள்ள நட்பு என்ற காரணத்தை எண்டிசையும் எதிரொலிக்கப் பறையறைந்து தங்கள் கனவை நனவாக்க முற்பட்டனர் கும்பினித் தளபதிகள். நம்பிக்கைத் துரோகி உமதுத்-உல்-உமாரா என்ற பழியை எங்கும் பரப்பினர். கம்பெனிக்குக் துரோகம் இழைத்ததால் உமதத்-உல்-உமாராவிடம் எஞ்சியிருந்த அதிகாரங்கள் அத்தனையும் பறிமுதல் செய்யவேண்டும் என்று முழங்கினர். இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட உமதுத்-உல்-உமாரா மரணப் படுக்கையில் வீழ்ந்தான். தனக்குப் பின் சிங்காதனம் ஏறத் தன் மகன் அலி-