பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வேலூர்ப் புரட்சி


களாயிருந்தாலும் பயிற்சி இல்லாத ராணுவத்தைக் கொண்டு பலம்பொருந்திய மாற்றார் படையை எதிர்த்து வெற்றி கொள்வது எங்கனம்? எனவே போராட்டதின் முடிவு பாளையக்காரர்களின் வீழ்ச்சியாகவே அமைந்தது. படைவன்மை மிக்க பாண்டி நாட்டுப் பாளையக்காரர்களாலேயே வெள்ளையரை வெற்றி காண்பது அரிதாக இருந்தது எனில் சிறு சிறு படைகளையே வைத்திருந்த வடஆர்க்காடு குறுநிலத் தலைவர்களால் கொள்ளை அடிக்க வந்த கும்பினிப் படையைச் சிதறியோடச் செய்யமுடியாமற் போனதில் விந்தை ஒன்றுமில்லைதான். ஆனால் பேய்க்குணம் படைத்த வெள்ளை வெறியர்கள் பாளையக்காரர்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு வட ஆர்க்காடு மாவட்டத்தில் செய்த அட்டூழியங்களை நினைக்கும்பொழுது நெஞ்சம் புண்ணாகும். பலம் பொருந்திய பாண்டி நாட்டில் செய்தது போலவே வட ஆர்க்காடு மாவட்டத்திலும் விளங்கிய வன்மைமிக்க கோட்டைகளை எல்லாம் இடித்துத் தள்ளி மண்மேடாக்கினர். சுதந்த வீரர்களைப் போராட்டக் காலத்தில் அணைத்துக் காப்பாற்றிய காடுகளை எல்லாம் அழித்து நாசமாக்கினர். வேல்பிடித்து வீரப்போர் புரிந்த தமிழர்களை எல்லாம் சுட்டுக் கொன்றனர். நாடாளும் உரிமை படைத்த குறுகில மன்னர்களை எல்லாம் விலங்கு பூண்டு வாழும் கைதிகளாக்கினர். தமிழகத்தின் தெற்கெல்லையில் செய்தது போலவே வட ஆர்க்காடு மாவட்டப் பாளையக்காரர் நடத்திய சின்னஞ்சிறு சுதந்தரப் போரில் வெள்ளையருக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்த ஒன்றிரண்டு