பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய விழிப்பு

19


துரோகிகளுக்கு ஊராளும் உரிமையைக் கொடுத்ததோடு பணமூட்டைகளையும் பரிசாக அளித்தனர். இவ்வாறு பல்வகையாலும் அல்லலுற்றும் அவமானமடைந்தும் மனங்கொதித்துக் கொண்டிருந்த வட ஆர்க்காடு மாவட்டத் தமிழர்கள் நயவஞ்சக வெள்ளை நரிகளைக் கொன்று குழியில்புதைக்க என்றேனும் ஒருநாள் வாய்க்காதா என்று ஏங்கிக் கிடந்தனர்.

1805-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி சென்னையிலிருந்த கும்பினி அரசாங்கத்துக்கு வட ஆர்க்காடு மாவட்டக் கலெக்டர் ஒரு கடிதம் எழுதினான். ராணுவ பலத்தால் வட ஆர்க்காட்டை அடக்கிவிட்டோம் என்று அதில் அவன் எக்காளமிட்டிருந்தான். ஆனால் அக்கடிதம் எழுதி ஓராண்டுதான் ஆயிற்று. அடுத்த ஆண்டு முடிவதற்குள் அவன் குலை நடுங்க- அவனுக்குச் சோறிட்ட பரதேசிக்கூட்டம் பதைபதைக்கப் பாரத நாடே நடுநடுங்கிப் போகும் வண்ணம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்று வடஆர்க்காடு மாவட்டத்திலே நடந்தது. ஆம். இத்தனை நாளும் தமிழர்களாகிய நாம்கூட மறந்துபோய்விட்ட அப்பெருகிகழ்ச்சி- வீரப் புரட்சி- வட ஆர்க்காடு மாவட்டத்தில் எங்கே என் எவ்வாறு நடந்தது என்பதுபற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் செய்திகளை எல்லாம் இனி வரும் இயல்களில் விரிவாகப் பார்ப்போம்.