பக்கம்:வைணமும் தமிழும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"திருப்பல்லாண்டு தொடங்கி” என்றருளிச் செய்வதிலிருந்தே பெரியவாச்சான் பிள்ளை திருப்பல்லாண்டைத் தனி திவ்வியப் பிரபந்தமாகக் கருதியிருந்தார் என்பது உறுதியாகிறது. வேதாந்த தேசிகர் அருளிச் செய்ததாகக் கருதப்படும் பிரபந்தசாரம் எனும் நூலில் திருப்பல்லாண்டு தனி திவ்வியப் பிரபந்தமாகக் கொள்ளப்படாததை நூலாசிரியர் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகிறார். ஆனால் திருமடல்களை பல பாடல்களாக வேதாந்த தேசிகர் பிரித்துள்ளது இலக்கண மரபுக்குச் சேராததாகையால் தவறு என்று முடிவுகூறும் ஆசிரியர் திருப்பல்லாண்டு விஷயத்திலும் அவ்வாறே கொள்ளக் குறையேதுமில்லை. இப்படிப்பட்ட சில தவறான கருத்துக்கள் இடம் பெற்றுள்ள காரணத்தினாலேயே பிரபந்தசாரம் எனும் நூல் வேதாந்த தேசிகர் அருளிச் செய்ததாக இருக்க முடியாது என்று ப்ர, அண்ணா ஸ்வாமி நிலை நாட்டியுள்ளார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

“பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்” என்ற தலைப்பில் அமைந்துள்ள மூன்றாம் இயல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பரகாலன் பைந்தமிழில் அகப் பொருள் துறைகள் எவை என்று ஆசிரியர் எடுத்துக் காட்டும்போது அவருடைய நுண்மாண் நுழைபுலம் நன்கு வெளிப்படுகிறது. பாசுரங்களில் அமைந்துள்ள சொற்களின் நயத்தை பூருவாசாரியர்கள் அருளிச் செய்துள்ள வியாக்கியானங்களின் நடையில் அருமையாக விளக்கியுள்ளார்.

“பன்னிரு ஆழ்வார்கள்” என்ற தலைப்பில் அமைந்துள்ள நான்காம் இயலில் ஆழ்வார்களுடைய வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஆனால் சம்பிரதாயக் கருத்துக்கு

viii