பக்கம்:வைணமும் தமிழும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

87


'கல்லுயர்ந்த நெடுமதில்சூழ் கச்சி திருவெஃகாவில்'[1] பொற்றாமரைப் பொய்கையில் திருவோண நட்சத்திரத்தில் திருமாலின் 'பாஞ்சசன்யம்' என்ற திருச்சங்கின் கூறாக அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணமாகப் பொய்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார். பூதத்தார் திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரம்) நறுமணம் வீசித் திவ்வியமாய் இருப்பதொரு குருக்கத்திப் பந்தலில் ஒரு குருக்கத்தி மலரில் ஐப்பசித் திங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் 'கெளமோதகி' என்னும் கதையின் கூறாகப்பிறந்தார். வடமொழியில் (பூ-சத்தாயாம்) என்ற தாது வடிவாகப் பிறந்தது பூதம் என்ற சொல். இது சத்தைப் பெற்றது என்று பொருள்படும். எம்பெருமானின் திருக்குணங்களை அநுபவித்தே சத்தைப் பெற்றார் என்னும் காரணம்பற்றியே பூதத்தாழ்வார் என்று திருநாமம் ஆயிற்று. பேயார் திருவல்லிக்கேணி என்னும் திவ்விய தேசத்திற்குத் தெற்கிலுள்ள தேனமர் சோலைமாடமாமலையிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலின் திருக்குளத்தில் உண்டானதொரு செவ்வல்லி மலரில் ஐப்பசித் திங்கள் சதய நட்சத்திரத்தில் திருமாலின் ‘நந்தகம்’ என்ற வாளின் கூறாகத் தோன்றினார். இவர் ஒப்புயர்வற்ற பக்தியுடையவராய் பார்ப்பவர்கள் கண்ணில் 'இவர் பேய்பிடித்தவர்' என்னும்படிநெஞ்சழிந்து கண் சுழன்று அழுதும் சிரித்தும் தொழுதும் எழுந்தாடியும் மகிழ்ந்து பாடியும் அலறியுமே பொழுது போக்கிக் கொண்டிருந்தமையால் பேயாழ்வார் என்ற திருநாமம் பெற்றனர்.இவர்கள் மூவரும் பார்ப்பனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை. இவர்தம் பிறப்பே அதற்கு அரணாக அமைகின்றது.


  1. காஞ்சி சொவண்ணம் செய்த பெருமாள் கோயில்.