பக்கம்:வைணமும் தமிழும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வைணவமும் தமிழும்


கின்றார் பூதத்தார். இந்த விளக்கினால் அகத்தே மண்டிக் கிடந்த உள் இருட்டும் நீங்கி விடுகின்றது. உடனே அந்தப் பேயாழ்வார் நான்காவது ஆளைக் கண்டுபிடித்து விடுகின்றார். அந்த எக்களிப்பே ஒரு பாசுரமாக வடிவங் கொண்டு நான்காவது ஆள் எம்பெருமானே! (“திருக்கோவலூர் தீங்கரும்பே") என்று காட்டி விடுகின்றது.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;-செருக்கிளரும்
பொன்ஆழி-கண்டேன்; புரிசங்கம் கண்டேன்;
என்ஆழி வண்ணன்பால் இன்று.[1]

என்பது பாசுரம். பேயாழ்வார் முதன்முதலாகப் பெரியபிராட்டியாரின் அருள் வடிவத்தைக் காண்கின்றார். பொன்மேனியையுடைய அன்னையாருடன்கூடிய எம்பெருமானின் மரகதத் திருமேனி இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கின்றது. மரகத மலையில் உதித்து ஒளிவீசி வரும் இளஞாயிறு போலத் தோன்றி இருவரது ஒளியையும் பொன் ஒளியும் மரகத ஒளியும் கலந்து ஒளிர்கின்ற அந்தக் கலப்பு ஒளியையும் காண்கின்றார். 'திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்' என்பதால் இது பெறப்படுகின்றது. இருவர் சேர்த்தியால் சேர்ந்த 'சமுதாய சோபை என்பது' பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான விளக்கம்.

ஆழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டதும் பக்திப் பெருக்கில் திளைத்துப் போகின்றனர். பொய்கையாழ்வார். தமதுபாசுரத்தைத்தொடர்ந்து முதல் திருவந்தாதியை


  1. மூன்-திருவந்1