பக்கம்:வைணமும் தமிழும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

91


100 பாசுரங்களால் பாடி நிறைவு செய்கின்றார். பூதத்தாழ்வார் தமது பாசுரம் தொடங்கி இரண்டாம் திருவந்தாதியை முடிக்கின்றார். பேயாழ்வார் தமது பாசுரத்தைத் தொடர்ந்து மூன்றாம் திருவந்தாதியைத் தலைக்கட்டுகின்றார். இங்ஙனம் குருபரம்பரை என்ற நூல் கூறுகின்றது. இந்த மூன்று திருவந்தாதிகளும் (முதல், இரண்டு, மூன்று) நாதமுனிகள் தொகுத்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா பகுதியில் முதலாவதாக இடம் பெற்றுள்ளன. அஞ்ஞான இருள் அகற்றப்பெறின் இறைவன் காட்சியளிப்பான் என்ற உண்மையை முதலாழ்வார்களின் வரலாற்றால் அறிகின்றோம்.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா!- வாசல்
கடைகழியா உள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி.[1]

என்ற பொய்கையாழ்வாரின் பாசுரமும் இந்த நிகழ்ச்சிக்கு அகச்சான்றாக அமைந்து எடுத்துரைப்பதாக உள்ளது.

இங்ஙனம் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரையொருவர் சந்தித்து அந்தாதிகள் அருளிச் செய்த திருக்கோவலூரை - திவ்வியப் பிரபந்தம் பிறந்த திவ்விய தேசத்தை - நினைந்து,

பாவரும் தமிழால் பேர்பெறு பனுவல்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி
முகுந்தனைத் தொழுத நன்னாடு.[2]

  1. முதல் திருவந்.86
  2. வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்-6