பக்கம்:வைணமும் தமிழும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வைணவமும் தமிழும்


பிராட்டியுடனே எழுந்தருளி அக்குழந்தையைக் குளிரக் கடாட்சித்து அதன் பசி தாகங்களை அகற்றி தமது திருமேனியைக் காட்டித் தேற்றி மறைந்தருள்கின்றார். பின்னர் அத்தெய்வக்குழந்தை அப்பெருமானது பிரிவை ஆற்றாமல் மீளவும் தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தது.

வளர்ப்பு : இந்நிலையில் அப்போது பிரம்பறுக்க வந்த 'திருவாளன்' என்னும் குறவன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அருகில் வந்து குழந்தையை வாரி எடுக்கின்றான்.அவன் மக்கட்பேறு இல்லாதவன். அக்குழந்தையை எடுத்துவந்து தன் மனைவியான 'பங்கயச்செல்வியிடம்' தர, இருவரும் அதனை அன்புடன் போற்றி வளர்க்கின்றனர். குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து மிக்க இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்று யோகியராக விளங்கியது. இவர்தம் குழவிப்பருவத்தில் ஆவின்பால் கொடுத்து வந்த பாகவதர் ஒருவருக்கு இவர் அருளால் பிறந்த 'கணிகண்ணன்' என்பான் இவருக்கு இணைபிரியாத் தொண்டனானான்.

திருமழிசையார்[1] உண்மைத் தத்துவம் இன்னதென அறிய முயன்று சமணம், பெளத்தம், சைவம் முதலிய எல்லாச் சமயங்களையும் ஆய்ந்து இறுதியில் திருமாலே முழுமுதற் கடவுள் எனத் தெளிந்து அப்பெருமானை, இடைவிடாது தியானித்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் நெடுங்கால யோகத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போதுதான் முதலாழ்வார்கள் மூவரும் இவரைச் சந்தித்து அளவளாவிப்


  1. இவர் வரலாறு மிக நீண்டது. இதனைக் காண விரும்புவோர் ஆழ்வார்களின் ஆராஅமுது என்ற நூலில் பக்தி சாரர் (4வது கட்டுரை ) என்ற கட்டுரையில் காணலாம். (கழகம்).