பக்கம்:வைணமும் தமிழும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




5. திவ்வியப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

தமிழுக்கு ஏற்றம் அளித்த பெருமை வைணவர்க்கு உண்டு. திவ்வியப் பிரபந்த சேவையன்றி திருமால் திருக்கோவில்களில் வழிபாடு இல்லை. இது தவிர, திவ்வியப் பிரபந்தத்திற்குத் திருக்கோயில்களில் விழா எடுத்து வரும் பெருமை இவர்கட்கு உண்டு. ஆண்டுதோறும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஏகாதசிக்கு முன்பும் பின்பும் திருமால் திருக் கோயில்களில் ‘அத்யயன உற்சவம்’ என்னும் இலக்கியப் பெருவிழா நடைபெற்று வருகின்றது. விழா நாட்களில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பகுதிகளையும் ஆசாரியர்கள் அருளிச்செய்த உரைகளையும் நாடோறும் அநுசந்தித்தும், சில பாசுரங்கட்கு அபிநயம் பிடித்தும் பாசுரங்களில் கூறப் பெற்றுள்ள சில செய்திகளை நாடகமாக நடித்தும் அரையர்[1] தாம் உருகுவதுடன் கூடியிருக்கும் மக்களையும் உருக்குவார்.


  1. அரையர்-அரசர் ஆழ்வார்களின் சார்பாளர்களாக இருந்து இவர்கள் இத்திருப்பணியைச்செய்வதால் ஆழ்வார் பாசுரங்களுக்கு இவர்கள் அரசர் ஆகின்றனர். பாசுரங்களைச் சொல்வதால் இவர்கள் அரசர் எனப் பெற்றனர். இவர்களை 'விண்ணப்பம் செய்வார்' 'நம்பாடுவான்' என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவரங்கப்பெருமானே இங்கனம் சேவிப்பவர்கட்கு 'அரையர்' என்ற விருதை அளித்ததாக உடையவர் அருளிய கோயில் ஒழுகு (Temple manual) என்ற நூலால் அறியக் கிடக்கின்றது.