பக்கம்:வைணமும் தமிழும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவ்யப் பிரபந்த இலக்கியப் பெருவிழா

123


பாசுரத்தொகை 224. 'இன்று இரக்கம் இன்றி' (10.2;1) என்ற பாசுர அபிநய வியாக்கியானம் நடைபெறும். இராம ராவணப்போர் முடிந்தது. இராவணன் அழிந்தான்; சில அரக்கர் எஞ்சினர். அவர்கள் தம் தோல்வியை ஒப்புக் கொண்டு பறை கொட்டி 'பொங்கத்தம் பொங்கோ'(10.2) என்ற ஒலிக் குறிப்புத் தோன்றக் கூத்தாடுவதைக் கூறும் பாசுரம் இது.[1]

பிற்பகலில் பெரிய திருமொழியின் சாற்றுப் பாசுரமான 'மாற்றமுள ஆகிலும்'(11.8) பதிகத்தின் இறுதிப் பாசுரமான 'குன்றம் எடுத்து' (11.8;10) என்பதைச் சேவிப்பார். பின்னர் திருநெடுந்தாண்டகத்தின் சாற்றுப் பாசுரமான,

அன்றுஆயர் குலமகளுக்கு
அரையன் தன்னை
அலைகடலைக் கடைந்துஅடைத்த
அம்மான் தன்னைக்;
குன்றாத வலியரக்கர்
கோனை மாளக்
'கொடுஞ்சிலைவாய்ச் சரம்துரந்து
குலம்க ளைந்து வென்றானை (29)

என்பதைப் பாடும்போது பெருமாள் அருளிப்பாடு இட, இப்பாசுரத்தில் கூறப்பெற்றுள்ள இராவணவதத்தை நடித்துக் காட்டுவார் அரையர். இராவணவதம் முடிந்து, சாற்று முறையை ‘மின்னுமாமழைதவழும்' (30) என்ற பாசுரம் தலைக்கட்டியதும் இலக்கியப் பெருவிழாவின் முதற்பகுதியான திருமொழித் திருவிழா (பகல் - பத்து உற்சவம்) நிறைவு பெறும்.


  1. ஆழ்வார் திரு நகரியிலும், ஶ்ரீவில்லிபுத்துளரிலும் இப்பதிகவியாக்கியானம் இல்லை.