பக்கம்:வைணமும் தமிழும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ உரைவளம்

133


நினைவிலிருந்து கொண்டு உதவுவோம்” என்று கூறி மறைந்தனன்.

வரதராசரும் இறைவன் பணித்தவண்ணம் எழுதத் தொடங்கி சில நாட்களில் ஒன்பதினாயிரப்படியையும் எழுதி முடித்தார். தாம் தமிழில் கற்றுத் துறைபோகிய வித்தகராதலின் பற்பலஇடங்களில் சில சிறப்புப் பொருள்களையும் எழுதினார். நிறைவு செய்த பணியை நஞ்சீயரிடம் சமர்ப்பித்து, அவரிடம் நிகழ்ந்தவற்றை அனைத்தையும் விண்ணப்பிக்க, நஞ்சியரும் அவரது கூரிய அறிவிற்கு மெச்சி அவரை ஆரத்தழுவி “இவர் இன்று முதல் நம்முடைய பிள்ளை; இவருடைய திருநாமமும் கலி கன்றிதாசர்”, என்று அருளிச் செய்து இவரைத் தம் அணுக்கத் தொண்டராக்கிக் கொண்டார். அன்று முதல் வரதராசருக்கு 'நம்பிள்ளை’ என்ற திருநாமமும்வழங்கலாயிற்று.

3. பன்னிராயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர்.

அன்போ டழகிய மணவாளச்சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா-தம்பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருளுரைத்தது
ஏதமில்பன் னிரா யிரம்.[1]

என்பர் மணவாள மாமுனிகள். 'பாகவதம்' பன்னிராயிரம் கிரந்தங்களையுடையது. அதனையொட்டி அத்தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. இந்த ஆசிரியரைப்பற்றியும் ஒரு சுவையான வரலாறு உண்டு.


  1. உ.ர.மா.45