பக்கம்:வைணமும் தமிழும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வைணவமும் தமிழும்


கிரந்தங்களாக இருக்கக் கண்டார். மிகவும் வருந்தித் தம்முடைய அனுமதியின்றி எழுதியதனால் நீரினைச் சொரிந்து கரையானுக்கு இரையாக்கினார். பின்னர் நம்பிள்ளை தம் விருப்பத்திற்குகந்த மாணவரும், சாத்திரங்கள் அனைத்தையும் முற்றக் கற்றுத் துறை போய வித்தகருமான பெரியவாச்சான் பிள்ளையை நோக்கி, திருவாய்மொழிக்கு ஒரு வியாக்கியானம் செய்யுமாறு நியமித்தார். அவரும் ஆசாரியர் நியமனப்படி . இவ்வியாக்கியானத்தை அருளிச் செய்தார். இதைத் தவிர இவர் நாலாயிரத்தில் மற்றைய மூவாயிரத்திற்கும் வியாக்கியானம் அருளிச் செய்துள்ளார்.

5. முப்பத்து ஆறாயிரப்படி: இதனை எழுதி உதவியவர் வடக்குத் திருவீதிப் பிள்ளை.

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை
வள்ளல் வடக்குத் திருவிதிப் பிள்ளை- இந்த
நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடுமுப்பத் தாறா யிரம்.[1]

என்ற மணவாளமாமுனிகளின் திருவாக்கால் இதனை அறியலாம். பிரம்மசூத்திரத்திற்கு இராமாநுசர் அருளிச் செய்தது. ஶ்ரீபாஷ்யம் என்ற பேருரை. அதன் ஆழ்பொருளையெல்லாம் அவனிக்கு விளக்கும் பொருட்டு சுதரிசனபட்டர் என்பார் 'சுருதப் பிரகாசிகை' என்ற நூலொன்றைச் செய்தார். அது முப்பத்தாறாயிரம் கிரந்தங்களையுடையது. அத்தொகை அளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது.

இந்த வியாக்கியத்தை 'ஈடு' என்ற பெயராலேயே வழங்குவர். ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன்' (திருவாய் 1, 6:3) என்ற


  1. உ.ர.ம,44