பக்கம்:வைணமும் தமிழும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வைணவமும் தமிழும்


கொண்டு தம் கணவர் அருகில் இருந்தார். இந்நிலையில் உடையவர் திருவடி நிலைகளைத் தம் முடியலே வைத்துக் கொண்டும், தம் திருவடிகளைத் தம் துணைவியார் மடியில் வைத்தநிலையிலும் மீண்டும் விழித்துக் கொள்ள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்; பரமபதித்தார்.

தாசரின் திருமேனியை விமானம்போல அலங்கரித் திருந்த பூந்தேரில் ஏற்றி வைத்து ஏகாங்கிகளும் மற்றப் பாகவதர்களும் மாறி மாறித் தோள்கொடுத்துத் துக்கிக் கொண்டு போக, அதைப் பொன்னாச்சியார் வைத்த கண் வாங்காமல் அந்தக் கண்களில் துளிநீரும் அரும்பாமல் பார்த்துக் கொண்டே மங்கை மன்னனின் பிரிவாற்றாமைப் பற்றிய திருமொழியை (பெரிதிரு.8:5) அதுசந்திக்கத் தொடங்கினார். முதற்பாசுரம் அதுசந்தித்து இரண்டாம் பாசுரம் அது சந்திக்கும் அளவில் முன்னே பூத்தேரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்பவர்கள் விரைந்து செல்லுவதனால் திருத்தேர் மறைய, அதற்குத் தகுதியாகப் பொன்னாச்சியாரின் அநுசந்தானம். -

    தேரும் போயிற்று; திசைகளும்
          மறைந்தன; செய்வதொன் றறியேனே (8.5:2)

என்ற பெரிய திருமொழிப் பாசுர அடிகளில் நடைபெற்ற நிலையில், திருத்தேர் சென்ற திசையை நோக்கித் தொழுத வண்ணம்) கீழே விழுந்து விட்டார். அவர் உயிரும் தன்னடைவே பிரிந்து போயிற்று. உடையவரின் ஆணைப்படி இவர்தம் திருமேனியையும் வில்லிதாசரின் திருமேனியுடன் பள்ளிப்படுத்தி அந்திமச் சடங்குகளை நடத்தினர்.