பக்கம்:வைணமும் தமிழும்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. வைணவ சமயத் தத்துவம்

திருமாலை முதற்கடவுளாகக் கொண்டு பல உயரிய கொள்கைகள் அடங்கிய பரந்த சமயமே வைணவ சமயம் ஆகும்.இச்சமயத்தின் கொள்கைகளை(1)தத்துவம், (2)இதம், (3) புருஷார்த்தம் என்று சுருக்கமாகக் கூறலாம். தத்துவங்கள் மூன்று. அவை சித்து, அசித்து ஈசுவரன் என்று வழங்கப் பெறுவன. சித்து என்பது, உயிர்களின் தொகுதி. அசித்து என்பது, மக்கள் விலங்கு முதலியவற்றின் உடம்பு முதலிய உலகப்பொருள்கள் எல்லாவற்றிற்கும் காரணமான பிரகிருதி என்பது. இதனை மூலப்பகுதி என்றும் வழங்குவர். ஈசுவரன், இறைவன், இவை மூன்றும் தத்துவத் திரயம் (திரயம் - மூன்று) என்ற பெயரால் வழங்கி வருகின்றன. தத்துவத் திரயம் என்ற ஒரு நூலும் உள்ளது. இது பிள்ளை உலக ஆசிரியர் என்பார் எழுதியுள்ள அஷ்டதசா இரகசியங்கள் (அஷ்டம்-எட்டு தசம்-பத்து) என்ற நூலில் ஒன்றாகும். அஷ்டதசா இரகசியங்கள் என்பதை பதினெட்டு இரகசியங்கள் என்று அருந்தமிழில் வழங்கலாம்.

1. சித்து

ஞானத்திற்கு இடமான ஆன்மா அல்லது உயிர் - சித்து என வழங்கப்பெறுகின்றது. இஃது அன்னமயம், பிராணமயம் மனோமயங்கட்கு அப்பாலாயிருப்பது. தேகம் இந்திரியங்கள், மனம், பிராணன், ஞானம் இவற்றிற்கு வேறுபட்டது. அறிகின்ற தலைவனும் அறிவும், அறியப்பெறும் பொருளும் தானாகவே