பக்கம்:வைணமும் தமிழும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

197


களால் அலங்கரிக்கப்பெற்றவன். அவனிடம் இக்குணங்கள் ஆதல் அழிதல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக்கும். இவற்றைத் தவிர, வாத்சல்யம், செளசீல்யம், செளலப்பியம் முதலிய எண்ணற்ற குணங்களையும் கொண்டவன்.

இந்தப் பூவுலகில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரணபூதன், அனைத்திற்கும் ஆதாரமானவன்; அனைத்தையும் அடக்கி ஆள்பவன்; அனைத்தினுடைய பலனையும் அநுபவிப்பவன். தன்னை அடைந்தவருடைய எல்லா வினைகளையும் போக்குபவன். சகல வேதங்களாலும் போற்றப்படுபவன். சகல கர்மங்களாலும் தானே ஆராதிக்கப் பெற்று பலன்களைத் தருபவன். நான்முகன் முதலிய சகல தேவர்களையும் படைப்பவன். அவர்கள் அனைவரும் இவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பவர்களே. இந்த லீலாவிபூதியில் (உலகில்) உயிர்களைத் தம் வினைகட்கேற்ப உடல்களை அடைவதற்கும், பிறகு அவை வீடுபேறு அடைவதற்கும் இவனே காரணன். இவன் விரும்பிப் பெற முடியாதது ஒன்றும் இல்லை.

நித்திய விபூதியாகிய பரமபதத்தில் இவனுக்கெனத் தனியான திருமேனி உண்டு. அஃது ஈடும் எடுப்பும் அற்ற பேரொளியினை உடையது. பேரழகு வாய்ந்து, கண்டாரை ஈர்ப்பது; யோகியரின் தியானத்திற்கு ஏற்றது. அந்த உருவத்துடன் பெரிய பிராட்டியார், பூமிப்பிராட்டியார், நீளாதேவி ஆகியோருக்கு நாயகனாக இருப்பவன்.

ஐந்து நிலைகள் : இறைவனுடைய திருமேனி (திவ்விய மங்கள விக்கிரகம்) பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யா மித்துவம், அர்ச்சை என்ற ஐந்து வகையோடு கூடியிருக்கும்.