பக்கம்:வைணமும் தமிழும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

5


யன்றி நம்பிமூத்த பிரானைப் போற்றும் முறையும் இருந்ததென்பதற்கு அவர் நூலில் ஒரு சிறந்த குறிப்பு உண்டு. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் 'பனை' என்ற சொல்லுக்கு முன் வரும் சொற்கள் புணரும் முறையை,

கொடிமுன் வரினே ஐஅவன் நிற்பக்
கடிநிலை இன்றே, வல்லெழுத்து மிகுதி![1]

என்ற நூற்பா விளக்கும். அதாவது 'பனை' என்பதற்கு முன் கொடி என்பது வருமொழியாக வருங்கால் ஏனையவை போல. ஐகாரம் கெட்டு அம்முச் சாரியை பெறாது ‘ஐ’ நிற்ப வல்லெழுத்துப் பெற்றுப் புணரும் என்று விதித்தல் காணலாம்.

பனை+கொடி = பனங்கொடி என்று வராது.

பனை + கொடி = பனைக் கொடி

என்றே வரும். இவ்வாறு தொல்காப்பியர் பனைக்கொடியை எடுத்துக்கொண்டு விதி கூறுவதனால் அக்கொடி அக்காலத்து வழக்குமிகுதி பெற்றிருந்தது என்பதை அறியலாம். இங்ஙனம் வழக்குமிகுதி பெற்ற பனைக் கொடி நம்பி மூத்தபிரானான பலதேவர்க்கு மட்டிலும் உரியது. இதனால் சங்கர்ஷண வாசுதேவர்கள் வடபுலத்தைப் போலவே தமிழகத்திலும் தொன்றுதொட்டு வழிபடப் பெற்று வந்த அவதாரமூர்த்திகள் என்பது தெளிவாகும்.[2]

இங்ஙனம் தமிழ் மக்களின் ஆதிதெய்வங்களுள் ஒருவரான கண்ணன், தானே தனித்தும், நம்பி மூத்தபிரானுடனும் நிகழ்த்தியவனவாக அம் மக்கள் வழங்கி வந்த வரலாறுகள்


  1. தொல்-எழுத்து- உயிர் மயங்கியல்-53
  2. இராகவய்யங்கார்.மு ஆராய்ச்சித் தொகுதி-பக் 54.