பக்கம்:வைணமும் தமிழும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வைணவமும் தமிழும்


பலவாகும். இவற்றுள் பல வடநூல் வழக்கு பெற்றவை; எனினும் தமிழகத்திற்கே உரியனவாக வரலாறுகளும் உள்ளன; இவற்றிற்குப் பாரதம் பாகவதம் முதலிய இதிகாச, புராணங்களில் சான்று காண்டல் மிக அரிது. இதனால் கண்ணன் வழியினராய்த் தென்னாட்டில் குடியேறிய வேளிரும் அப்பிரான் வளர்ந்த ஆயர்பாடியராய் (கோகுலத்தவராய்) இங்கு வந்தேறிய ஆயரும் போன்றே பழந்தமிழ்க்குடிகளால் அவ்வரலாற்று வழக்குகள் இங்கும் வழங்கி நடைபெறலாயின என்று கொள்ளத் தட்டில்லை. இவ்வரலாறுகளில் சிறப்புடையவை நப்பின்னைப் பிராட்டித் திருமணம், கண்ணன் குருந்தொசித்தது, குடக்கூத்து ஆடியது, ததிபாண்டற்கு வீடு பேறு அளித்தது முதலியனவாகும். இச்செய்திகள் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பழமொழி நானூறு, ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் அஷ்டப் பிரபந்தம் முதலான நூல்களில் காணப் பெறுகின்றன.

2. பத்துப்பாட்டு

தொல்காப்பியத்தை அடுத்துப் பத்துப்பாட்டும் எட்டுத் தொகை நூல்களும் எழுந்தன. இவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியனவாகக் கூறுவர். முதற்கண்கூறிய பத்துப்பாட்டில் மாயோனைப்பற்றிய குறிப்புகள் பல காணலாம். அவற்றுள் சில :