பக்கம்:வைணமும் தமிழும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ மந்திரங்கள்

217


பற்றுகிறேன் என்பதைச் சொல்லுகின்றது. இதைத்தான் சரமசுலோகத்தின் முன் வாக்கியம் விதிமுகத்தால் விளக்குகின்றது. இங்ஙனம் கட்டளை இடுங்கால் பல தருமங்களை உபதேசித்து அவற்றை நிலைநிறுத்துபவனான பகவானே, மற்ற தருமங்களை விட்டுத் தன்னையே பற்றுமாறு கூறுவதனால் இஃது அவனுக்கு உகந்த தருமம் என்பது புலப்படுகின்றது. இவ்வாறு அவனைப் பற்றும்போது மற்ற தருமங்களை விட்டே பற்ற வேண்டியிருத்தலின் அவற்றின் விடுகையையும், தாம் எம்பெருமானைப் பற்றும் பற்றும் தன் பேற்றிற்கு உபாய மன்று, அவனே உபாயம் என்னும் அவன் உபாயத் தன்மையையும் இவ்வாக்கியம் தெளிவாகத் தெரிவிக்கின்றதைக் காணலாம்.

துவயத்தின் பின் வாக்கியம் பெரிய பிராட்டியாரும் எம் பெருமானும் ஆகிய சோத்தியில் எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக’ என்பதைப் பகருகின்றது. இத்தொண்டு எம் பெருமானை அடையவொட்டாமல் தடைசெய்யும் பாவங்கள் கழிந்த காலத்திலேயே ஏற்படும். அப் பாவங்களின் கழிவைச் சரமசுலோகத்தின் பின் வாக்கியம் தெளிவாகக் கூறுகின்றது. இவற்றால் இரண்டு மந்திரங்களின் தொடர்பு அறியப்படும்.

(2) பாரதப் பெரும்போரில் தேர்த் தட்டில் இருந்த பார்த்தன் தனக்குச் சாரதியாக இருந்த பரந்தாமனைச் சரண் அடைந்து தனக்குமுன் நிற்கும் உறவினர்கள், ஆசாரியர்கள் இவர்களைக் கொல்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி நிலை குலைந்து பரந்தாமனைச் சரணடைந்து தனக்கு இதத்தை உபதேசிக்குமாறு வேண்டினான். அவனும் பார்த்தன்மீது கருணைகொண்டு கீதையின் வாயிலாக ஆன்ம சொரூபத்தையும் கர்ம ஞான பக்திகளாகிய உபாயங்களையும் விரிவாக