பக்கம்:வைணமும் தமிழும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. இருவகை ஞானங்கள்

வேதத்தின் சாரமான திருமந்திரம் எல்லாப் பொருள்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருப்பினும் சேதநன் அறியவேண்டியவை சம்பந்தஞானம், அர்த்தபஞ்சக ஞானம் ஆகிய இரண்டும் மிகமுக்கியமானவை. அவைபற்றி ஈண்டுக் காண்போம்.

1. சம்பந்த ஞானம்

எம்பெருமானாகிய சர்வேசுவரனுக்கும் ஆன்ம கோடிகளாகிய நமக்கும் உள்ள உறவுமுறையை அறிவதைச் ‘சம்பந்த ஞானம் என்று கூறுவர். இந்தச் சம்பந்த ஞானம் உள்ள இடத்தில் எம்பெருமான் விரும்பி அடைவான். ஆதலால் சம்பந்தஞானம் அவன்மீது அந்த எம்பெருமான் மீது-விருப்பம் கொள்வதற்குக் காரணமாகின்றது. இந்தக் கருத்தைத் திருமழிசையாழ்வார் மிக அற்புதமாகப் புலப்படுத்துவார்.

          நின்ற தெந்தை ஊர கத்து
              இருந்த தெந்தை பாடகத்து
          அன்று வெஃக ணைக் கிடந்த(து)
              என்னிலாத முன்னெ லாம்
          அன்று நான் பிறந்தி லேன்
              பிறந்தபின் மறந்தி லேன்
          நின்ற தும்இருந்ததும்
              கிடந்த தும் என் நெஞ்சுளே(திருச்சந்த-64)