பக்கம்:வைணமும் தமிழும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

வைணவமும் தமிழும்


‘அன்றிவ்வுலகம்’(24) என்ற இருபத்து நான்காம் பாசுரத்தில் கண்ணன் புறப்பட்டுவர,இவர்களும் தண்டகாரண்ய முனிவர் தாம் இராக்கதர்களால் தமக்கு நேரிடும் துன்பங்களைச் சொல்லிமுறையிட வேண்டும் என்று நினைத் திருந்ததை மறந்து, இராமபிரானைக் கண்டவுடன் மங்களா சாசனம் தொடங்கினாற்போலே, தங்கள் மனோரதங்களை மறந்து, இத்திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது? என்று வருந்தி பண்டு உலகளந்த வரலாற்றையும் நினைந்து வயிறெரிந்து இத்திருவடிகட்கு ஒரு தீங்கு நேராதொழிய வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கின்றனர். ‘அடிபோற்றி’, கழல்போற்றி, குணம் போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, வேல் போற்றி என்று இவர்கள் நாக்கிற்கு அறுசுவை அடிசில் இடுவதுபோல் (ஷட்ரசம்) இட்டு மகிழ்கின்றனர்: “இன்று யாம் வந்தோம்; இரங்கியருள்வாய்” என்கின்றனர். பிரபத்திக்கு அடிகோலுகின்றனர்.

‘ஒருத்தி மகனாய்' (25) என இருப்பத்தைந்தாம் பாசுரத்தில் "உன்னுடைய திருக்குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்தமையால் யாதொரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம். ‘பறை’ என்ற வியாஜயத்தையிட்டு உன்னைக் காண்பதற் காகவே வந்தோம். இதனால் நின்னைப் பிரிந்திருக்கும் துன்பம் நீங்கி மகிழ்கின்றோம்” என்கின்றார்கள், தாம் வந்த காரியத்தை,

        எற்றைக்கும் ஏழேழ் .
              பிறவிக்கும் உன்தன்னோடு
        உற்றோமே யாவோம்;
              உனக்கேநாம் ஆட்செய்வோம். (29)