பக்கம்:வைணமும் தமிழும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வீடுப்பேற்றிற்குரிய வழிகள்

27


இருக்குமாயினும் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொருவரிடை யேயும் தலையெடுத்து மற்றவை அடங்கியிருக்கும். பொய்கை யாழ்வாருக்குப் பரஞானம் பரமபக்திகளின் சாயை மாத்திரம் தோன்றி பரபக்தியே விஞ்சியிருக்கும். பூதத்தாழ்வாருக்குப் பரபக்தி முற்றிப் பக்குவமாகி பரமபக்தித் தோன்றக் காரணமான பரஞானமே விஞ்சியிருக்கும். பேயாழ்வாருக்குப் பரமபக்தியே விஞ்சிப் பரபக்தி பரஞானம் ஆகிய இரண்டும் அதற்குள்ளயே மறைந்து கிடக்கும். இம் மூவருடைய அருளிச்செயல்களினின்றும் இந்த நிலைகளைக் கண்டறிந்து தாம் கண்டவற்றை இவ்வாறு வகுத்தருளினர். இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் ஒளியும் மற்றவைகளின் ஒளியின்மையும் எம்பெருமானுடைய சங்கற்பத்தினால் உண்டானவை என்பது இவர்தம் உள்ளக்கிடக்கையாகும். ஆகவே, இதில் எவ்வகையான மறுப்புக்கும் இடம் இல்லை. இந்த மூன்று நிலைகளும் முத்தியிலே உண்டாகக் கூடியவை யேயாயினும் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கட்கு மாத்திரம் இங்கிருக்கும்போதே எம்பெருமானுடைய திருவருளால் விளைந்தனவாகும். இனிஇவற்றை எம்பெருமானிடம் வேண்டிப் பெறுதலும் உண்டு.

பொய்கையார் “வையம் தகளி” என்றும், பூதத்தார் “அன்பே தகளி என்றும் இரண்டு திருவிளக்குகள் ஏற்றிக் காட்டினர். அந்த ஒளியில் பேயார் 'கண்டேன், கண்டேன்’ என்று களிப்புடன் பேசுகின்றார்.

     “மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்,
     தன்னொடும் மாயனைக் கண்டமைகாட்டும் தமிழ்த் தலைவன்”



6. இராமா.நூற்-10