பக்கம்:வைணமும் தமிழும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

வைணவமும் தமிழும்


பிரபத்திற்கு விஷய நியமமே முக்கியமானது (ஸ்ரீவச பூஷ25,37,38). இன்ன விஷயத்திலே செய்ய வேண்டும் என்ற நியமமே உள்ளது. குணபூர்த்தி உள்ள இடமே விஷயமா கின்றது, இஃது இறைவனுடைய ஐந்து நிலைகளிலும் கண்ணாலே காணலாம்படி இருக்கும் அர்ச்சாவதாரமேயாகும். இங்குத்தான் எல்லா குணங்களும் நிறைந்திருக்கும். பிரபத்திக்கு வேண்டப்படும் வாத்சல்யம், செளலப்பியம் முதலான குணங்கள் இருட்டறையில் விளக்குப்போல் பிரகாசிப்பது இங்குத்தான் என்பது அறியத்தக்கது. பரமபதத்திலுள்ளாரும் சீலம் முதலிய குணங்களை அநுபவிப்பதற்கு இங்குத்தான் வருகின்றனர். மயர்வற மதிநனம் அருளப்பெற்ற ஆழ்வார் பெருமக்கள் பல இடங்களிலும் இந்த அர்ச்சையில்தான் பிரபத்தி பண்ணினார்கள் என்பது ஈண்டு அறியப்படும்.

(இ). ஆழ்வார் பாசுரங்களில் : ஆழ்வார் பாசுரங்களில் இந்நெறியை அறிந்து தெளியலாம். பொய்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் இந்நெறி குறிப்பிடப் பெறுகின்றது.

அடைந்த அருவினையோடு
          அல்லல்நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய
          வேண்டில்-நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான்
          முரணழிய முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான்
          சரண்
(முதல், திருவந்: 59)

[அடைந்த பற்றிக்கிடக்கும், தீவினை-பழவினை; அல்லல் மனத்துன்பம்; பாவம்-இப்போது செய்வது; மிடைந்தவை - ஆன்மாவை மூடிக்கிடப்பவை; மீண்டு நீங்க; நுடங்கிடை-மெல்லிய இடையையுடைய பிராட்டி]