பக்கம்:வைணமும் தமிழும்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

வைணவமும் தமிழும்


எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும், விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் - மூன்று பதங்கள் (ஒம்+நமோ+நாராயணாய போலவும், மூன்றெழுத்துகள் கூடி (அ+உ+ம= ஓம்) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்.

5. எம் பெருமான் சிலவற்றுடன் ஒப்பு : வைணவ உரையாசிரியர்கள் எம் பெருமானை, நீர், மேகம், இரத்தினம், நிதி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளனர். இவை மிகவும் அற்புதமாக உள்ளத்தைத் தொடும் விளக்கங்களாக அமைந்துள்ளன. இவற்றை வழிவழியாக வைணவப் பெருமக்கள் அநுபவித்து மகிழ்கின்றனர்.

(அ) யானை: 'கைம்மான மழகளிற்றை' (பெரி. திரு.581) என்பது மங்கை மன்னனின் மணிவார்த்தை ஒரு யானை - கையையும் கால்களையும் படுத்துக்கொண்டு கிடப்பதுபோலத் திருவரங்கப் பெருமான் அறிதுயில் கொண்டு பள்ளியில் கிடக்கும் கோலத்தில் ஈடுபட்டுச்சொல்லுகின்றபடியாகும் இது. ‘தென்னானாய் வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” (திருநெடுந் 10) என்று மீண்டும் அருளிச் செய்வர் இவ்வாழ்வார். ‘என்ஆனை என்னப்பன் எம்பெருமான்’ (திருவாய். 3.9:1) என்றார் சடகோபரும் யானைக்கும் எம்பெருமானுக்கும் பலவிதமாக ஒப்புமை உண்டு.

(i) யானையை எத்தனை தடவைப் பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப்போல் பரமானந்தத்தைத் தரும்; எம்பெருமானும் “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆரா அமுதமே" (திருவாய் 25:4) என்று இருப்பான்.