பக்கம்:வைணமும் தமிழும்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

307



(ii). யானைமீது ஏறவேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்; எம்பெருமானைச் சேரவேண்டியவர்களும் அவன் திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.

(iii). யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்: “எட்டினோடிரண்டெனும் கயிற்றினால்” (திருசந்த.83) என்றபடி எம்பெருமானைக் கட்டுப்படுத்தும் பக்தியாகின்ற கயிற்றை அவன்தானே தந்தருள்வான்; “மதிநலம் அருளினன்” (திருவாய் 1.1.1)

(iv). யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமானும் சுத்த பவித்திரனாய், சுத்த சத்து மயனாய் இருந்தாலும் “பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்" (திருவிருத்) உடைய நம்போலியருடன் சேரத்திருவுள்ளமாயிருப்பன்,வாத்சல்யத்தாலே

(v). யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும். பிராட்டியின் புருஷகாரமின்றி பெருமான் வசப்படான்.

(vi). யானை பாகனுடைய அநுமதியின்றித் தன்பக்கம் வருபவர்களைத் தள்ளிவிடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” (திருவாய் 4.6.8) என்னும்படி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

(vii). யானையின் மொழியைப் பாகனே அறிவான்; எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்? இராமாநுசருக்கு நம்பிகள் சாதித்த 'ஆறு வார்த்தைகளை' நினைவுகூர்வது.