பக்கம்:வைணமும் தமிழும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வைணவமும் தமிழும்



(2) புறநானூறு : புறநானூற்றில் வரும் குறிப்புகளைக் காண்போம் (i) புறம்-174ல் அசுரர் சூரியனை ஒளித்ததும், திருமால் அதனை மீட்டதும் கூறப் பெற்றுள்ளன.[1] இந்த வரலாற்றைப் பற்றி அறியக்கூடவில்லை. இன்னொரு பாடலில் (ii) (புறம்-378) இராமாயண நிகழ்ச்சிபற்றி ஒருகுறிப்பு வருகின்றது.சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி ஊன் பதி பசுங்குடையாருக்குச் சில பரிசிற் பொருளை நல்கினான். அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன. அவை பொருநர்க்கெனச் சமைக்கப் பெறாதவை; அரசர்க்கும் செல்வர்க்குமெனச் சமைக்கப் பெற்றவை; போரில் பகைவர்பால் கொண்டனவும் அவற்றுள் அடங்கியிருந்தன. அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக்கிணைப் பொருநன் கூற்றில் வைத்துக் கூறுவான். இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவள் கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து மகிழ்ந்ததைப் போல பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலிலும், கழுத்திலணிபவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும்போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.


  1. தேவர்களும், அசுரர்களும் பொருதபொழுது பகலும் இரவும் போல இயங்கித் தாம் போர் செய்தற் பொருட்டு அகரர் ஞாயிற்றைக் கரந்தனர். ஞாலம் அதனால் உற்றபருவரல் தீரத் திருமால் அதைக் கொண்டு வந்தார் என்பது ஒரு கதை.