பக்கம்:வைணமும் தமிழும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வைணவமும் தமிழும்


ஓங்கி விளங்கிய இடைப்பட்ட விடத்தே நல்ல நீல நிறத்தையுடைய மேகம் தன் மின்னாகிய புதுப் புடவையை உடுத்து தன் வில்லாகிய பணியைப் பூண்டு நின்றாற்போல ஆழியையும் சங்கையும் தாமரைக் கையகத்தே வலனும் இடனும் ஏந்தி அழகிய ஆரத்தைத் திருமார்பில் பூண்டு பொற்பூவாடையை உடுத்து அவன் நின்றருளும் செய்தி தரப்பெறுகின்றது.

இவற்றைத் தவிர, சிலப்பதிகாரத்தில் வேறு சில இடங்களில் வேங்கடத்தைப் பற்றிய குறிப்பு காணப் பெறுகின்றது.

'நெடியோன் குன்றமும் தொடியோன் பெளவமும்
தமிழ்வரம் புறுத்த தண்புனல் நன்னாடு’. [1]

என்றும், .

வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும். [2]

என்றும் வருதலைக் காணலாம். திருமால் வேங்கடத்தில் நின்றருளும் செய்தியும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் கூறப் பெறவில்லை. சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாதலின் திருவரங்கம் திருவேங்கடத் தலங்களின் வழிபாடு அந்நூற்றாண்டிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆயினும் ஒரு தலம் புகழும்பெருமையும் பெற்று விளங்கிய காலத்திற்குச் சில பல ஆண்டுகட்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்ற கொள்கைக்கிணங்க கிறித்து ஆண்டுத் தொடக்கத்திலேயே


  1. சிலம்பு-வேனிற்காதை- (1-2)
  2. மேலது-கடலாடு-(30-31)