பக்கம்:வைணமும் தமிழும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வைணவமும் தமிழும்


பெருவழக்காக இருந்ததை நேரில் கண்டவராதலால் தாம் இயற்றும் காவியம் மக்களிடையே நன்கு பரவுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கருதிய திருத்தக்க தேவர் அவற்றைத் தம் காவியத்தில் பொருத்தமான இடங்களில் பெய்து தம் காவியத்தைச் சிறப்பித்துள்ளார்; ஒன்றிரண்டு செய்திகள் ஈண்டுக் காட்டப் பெறுகின்றன.

(i) குருந்தொசித்த வரலாறு: சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத்திலும் (180),(ii) கண்ணன் மறைந்து வளர்ந்த கதை அதே இலம்பகத்திலும் (333), (iii) கண்ணன் நப்பின்னையை மணந்த குறிப்பு கோவிந்தையார் இலம்பகத்திலும் (74), (iv) இராமன் மராமரம் எய்த வரலாறு கனகமாலையார் இலம்பகத்திலும் (87) குறிப்பிடப் பெற்றுள்ளன.

சங்க காலத்தையும், நீதிநூல் காலத்தையும் அடுத்துக்காணப் பெறுவது பக்தி இயக்கக் காலம். இக்காலத்தில்தான் ஆழ்வார் பெருமக்கள் தோன்றி பக்திப் பாசுரங்களைப் பாடி வைணவ சமயத்தைச் செழிக்கச் செய்தனர். பக்தி இயக்கம் தமிழையும் செழிக்கச் செய்தது. தமிழால் பக்தி இயக்கமும் ஏற்றம் பெற்றது. இவற்றால் நமக்குக் கிடைத்த செல்வம் கருவூலம் போன்ற சமய இலக்கியங்கள். தமிழ் இலக்கியத்தில் சமய இலக்கியக் கருவூலத்தை நீக்கிப் பார்த்தால் தமிழ் இலக்கியம் மிகுந்த வறுமை நிலையைக் காட்டும்.