பக்கம்:வைணமும் தமிழும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வைணவமும் தமிழும்



நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றுப் பத்தொன்றும் நமக்குரைத்தோன் வாழியே[1]

என்று பெரியாழ்வாரைப்பற்றிய தமது வாழித்திருநாமத்தில் கூறியிருப்பதனால் அறியலாகும்.

மேற்குறிப்பிட்ட இருவர் கருத்துக்களையும் ஒரு சிறிது ஆராய்வோம். திவ்வியப் பிரபந்தத்தை நான்காகப் பிரித்து ஒவ்வொரு தொகுதியிலும் இந்த இந்தப் பிரபந்தம் இந்த இந்த வரிசையில்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்தவர் நாதமுனிகள். அவர் திருப்பல்லாண்டைத் தனிப் பிரபந்தமாகக் கருதியிருந்தால் வண்ணமாடங்கள் (11) முதல் மெச்சூது (21) வரையில் பத்துத் திருமொழிகளைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கி பெரியாழ்வார் திருமொழி-முதல் பத்து என்று வகுத்திருக்க வேண்டுமேயன்றி ஒன்பது திருமொழிகளை வைத்துப் பத்து எனப் பெயரிடக் காரணம் எதுவுமில்லை. அவர் அங்ஙனம் செய்யாமல் வட்டு நடுவே (1,9)என்ற திருமொழியுடன் ஒரு பத்தாக்கியுள்ளார். திவ்வியப்பிரபந்தத்தில் ‘பத்து’ என்ற பரிவு 'இருக்கு' வேதத்தில் மண்டலங்களின் உட்பிரிவுகள் வகுக்கப்பெற்றுள்ள மரபை ஒட்டியது. அங்கு அந்த உட்பிரிவுகள் 'சூக்தம்' எனப்படுகின்றன. 'சூக்தம்' என்பதே தமிழில் 'திருமொழி' எனப்படுகின்றது. பல திருமொழிகளுள்ள பிரபந்தங்களே 'பெரியாழ்வார்திருமொழி', 'நாச்சியார் திருமொழி', 'பெருமாள் திருமொழி', 'பெரிய திருமொழி' என்றிப்படித் திருமொழி என்ற பெயர்களைப் பெற்றன என்பதும் நம்மாழ்வார் ஆயிரமும் 'நம்மாழ்வார் திருமொழி' என்றே கூறப் பெறலாமாயினும் அதன் சிறப்புத்


  1. வாழித்திருநாமம்-16