பக்கம்:வைணமும் தமிழும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வைணவமும் தமிழும்


குறிப்பாக நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பெண் தன்மை எய்திப் பல திருக்கோயில் மூர்த்திகளை அநுபவித்ததை அவர்களுடைய திருப்பாசுரங்களில் காணலாம்.

வைணவர்களிடையே நிலவும் மரபொன்று உண்டு. தண்டகாரண்ய முனிவர்கள் இராமபிரானது பேரழகில் ஈடுபட்டுப் பெண்மையை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆய மங்கையர்களாகிக் கண்ணனைக் கூடினர் என்ற வழக்கு ஒன்று உண்டு. ஆனால் ஆழ்வார்கள் அப்படியின்றி அப்பொழுதே பெண்மை நிலையை அடைந்து எம்பெருமானாகிய புருடோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களிடம் சில சமயம் ஞானம் தலை தூக்கி திற்கும்; சில சமயம் பிரேமம் (காதல்) மீதூர்ந்து நிற்கும். இந்த இரண்டு நிலைகளிலிருக்கும் பொழுது அவர்கள் பாசுரங்கள் அருளியுள்ளனர். இதனை,

ஞானத்தில் தம் பேச்சு;
பிரேமத்தில் பெண் பேச்சு’ [1]

என்ற ஆசாரிய ஹிருதயம் என்ற நூல் குறிப்பிடும். அதாவது ஞான நிலையிலிருக்கும்பொழுது அவர்கள் தாமான தன்மையில் நின்று பேசுவர். பிரேம நிலையிலிருக்கும்பொழுது பெண் தன்மையை அடைந்து வேற்று வாயாலே பெண் பேச்சாகப் பேசுவர். அப்பொழுது நம்மாழ்வாருக்குப் 'பராங்குசர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பராங்குசநாயகி என்ற பெண்மைப் பெயர் வந்தடையும்; திருமங்கை


  1. ஆசா~ ஹிரு சூத்திரம்-118