பக்கம்:வைணமும் தமிழும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

73


நலத்திற்குக் காரணமான வேப்பிலை உருண்டையை உட்கொள்ள வேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியில் பூசி உண்பிப்பது போலவும், கொயினா மாத்திரைகட்குச் சருக்கரை பாகு பூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின்பிப்பது போலவும் சிற்றின்பம் கூறும் வகையால் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய காமத்தினை உடையவர்கட்குக் காட்டப்பெறும் உக்தி முறையாக இறையனார் களவியலிலும்[1] கூறப்பெற்றுள்ளமையை ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஒர் இலக்கிய மரபே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை.

(5)மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை: தூது என்பது ஒருவர் தம்முடைய கருத்தை வேறொருவருக்கு இடை நின்ற ஒருவர் வாயிலாகக் கூறி விடுப்பது. சங்க இலக்கியங்களில் ‘காமம் மிக்க கழிபடர்கிழவிகளாக' இருந்த துறையே பிற்காலத்தில் தூது இலக்கியங்களாக வடிவு கொண்டன என்பது ஆய்வாளர்களின் கருத்து. பக்தி இலக்கியங்கள் வளர்ந்த காலத்தில் ஆழ்வார் பெருமக்கள் இந்த அகத்துறைகளை மிக அருமையாகப் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் ஆழ்வார்கள் புள்ளினங்களையே தூது போகும்படியாகப் பாசுரங்களை அமைப்பர்; குருகினங்கள், நாரைகள், அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, மயில், பூவை, அன்றில்கள், வண்டினங்கள் முதலியன தூதுவிடும் பொருள்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றைத் தவிர வாடை, மேகம், நெஞ்சு போன்றவற்றையும் இவர்தம் பாசுரங்களில் தூதுப்பொருள்களாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.


  1. இறை-கள நூற் 2. இன் உரை