பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை-பு-இ-கூடற்புரானம்




கடவுள் வணக்கப் பகுதியுள் திருமாலன்றி சேனைத் தலைவர், பெரிய திருவடி (கருடன்), சிறிய திருவடி (அநுமன்), ஐம்படைகள், பரமபாகவதர் வணங்கி, பெரியாழ்வாருக்கும் கோதைப் பிராட்டிக்கும் வணக்கம் கூறப்பெற்றுள்ளது. அதன்பின் ஆசிரியப் புத்தூரான் பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோழன் அடிபணிந்து தலத்துத் தாயாராகிய மதுரை வல்லி பதமும், நாவின் கிழத்தியும், பத்து அவதாரங்களும் வணங்கி பன்னிரு ஆழ்வார்களையும் வணங்குகின்றார். அதன் பின்னர் எம்பெருமானாரை வணங்கி, அண்டகோளத்தார் என்னும் பாடலைக் குறிப்பிட்டு பதின்மர் பாடலைத் தரித்தவருடைய தாளைப் போற்றுகின்றார்.

அண்ட கோளத் தார்என்னும்
ஆரியத் தமிழ்என் றிங்கு
தண்டமிழ்ச் சங்கம் வென்ற
சடகோபர் தாமே சிற்பங்
கண்டதோர் வடிவாற் பேசத்
திரைப்புறத் திருந்த காலத்
துண்டெனப் பதின்மர் பாட
லுத்தரித் தவர்தாள் போற்றி

'அண்டகோளத்தார் என்னும் ஆரியத்தமிழ் என்று இங்குக் குறிப்பிட்டது பதினேழு அடிகொண்ட ஒர் ஆசிரியப்பா. இப்பாடலை மதுரைச் சங்கத்தாருக்கு நம்மாழ்வார் அனுப்பி பொருள் காணச் சொன்னார் என்றும், அவர்கள் பொருள் காணமாட்டாது விழித்தார்கள் என்றும் ஒரு கதை எழுந்தது. அக்கதையையே இப்பாடல் காட்டுகின்றது.

அவையடக்கம் 4 பாடல்களைக் கொண்டது. இங்கு மீண்டும் பெரியாழ்வார் பாசுரத்தைக் குறிப்பிடுவது காணத்தக்கது. பின்வரும் 'புராண வரலாறு’ என்ற பகுதியில் 16 பாடல்கள் அடக்கம். இது நூலுக்குப் பதிகமாக அமைந்தது. ஒரு பாடலில் இப்புராணம் பிரம்மாண்ட புராணத்துள் 'கேத்திர மான்மிய காண்டத்தில் 82-93 கதைகளாக 12 அத்தியாயங்கள் உள்ளன என்கின்றார்.

81