சுராவின் வைணவ புராணங்கள்
ஒரு சைவ சமயத்தையும், பாகவதக் கதைகள், இராமாயண பாரதக் கதைகள் இல்லாத ஒரு வைணவ சமயத்தையும் நாம் எண்ணிப் பார்க்க முடியுமா ? அரும் பாசுரங்கள் மக்களை ஆட்கொண்டன என்பது முற்றிலும் உண்மை. சாத்திர உணர்ச்சி சிலருக்கு மட்டுமே அறிவு விருந்தாக அமைய முடியும்.
இன்று புராணப் பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், சாத்திர நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களைக் கவனித்தால் புராணப் பொழிவுகள் நடைபெறும் இடங்களில்தான் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதைக் காணும்போது மக்களுக்குப் புராணங்களில் இருக்கும் ஈடுபாட்டை விளக்க இஃதொன்றே போதுமானது.
தல புராணங்களால் விளைந்த பயன்: தமிழ் நாட்டில் ஊர்தோறும் கோயில் உண்டு. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழஞ்சொல்லுக்கேற்ப ஆதிகாலத்தில் மக்கள் கோயில் என்று தாங்கள் கருதிய இடங்களில் வாழ்ந்தார்கள். வாழ்ந்த இடங்களில் புதிதாகக் கோயில்களை அமைத்துக் கொண்டனர். நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய தலங்கட்குச் சென்றுவரத் தொடங்கினர். இவற்றால் ஒரு கோயிலைச் சுற்றிப் பல கதைகள் தோன்றலாயின. புலமை படைத்தவர்கள் அக்கதைகளையெல்லாம் தொகுத்துப் புராணங்களாகப் பாடினர்.
ஊர்தோறும் உள்ள இறைவன் திருவுருவத்தைப் பாடத் தொடங்கினர். பலர் தலபுராணம் பாடினர். 'பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள், இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமால்' (7.34:1) என்ற தம்பிரான் தோழரின் வாக்கு அவர்கட்கு ஊக்கம் அளித்தது. தல புராணங்கள் கோயிலைப் பாடுகின்றமையால் கோயில் பற்றிய செய்திகளும் பெரிதும் விளக்கமாகின்றன.
நாயன்மார்கள் பல தலங்கட்கும் சென்று பதிகம் பாடினமையாலும், ஆழ்வார் பெருமக்கள் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்தமையாலும் பக்திமான்கள் திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்தத் தரிசன உணர்ச்சியைத் தல புராணம் பின்னும் பெருக்கியது. வடவேங்கடம்