இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வை.பு.இ.இதிகாக பாகவதம்
- பன்னிய வரைமுதற் பலஅ ரண்களில்
- துன்னுவெம் சமத்திடைத் தோன்ற லுற்றுமுன்
- மன்னுவெம் கனகனை மாய்த்த மைந்துடை
- நன்னலம் சேர்தர மடங்கல் காக்கவே.
பின்னர் இந்திரன், விருத்திரன் முதலியோரை அழித்தல், அந்த பிரமகத்தியைப் போக்கியது, சித்திரகேது, மருத்துகள் ஆகிய வரலாறுகள் தொடர்கின்றன.
ஏழாம் கந்தம்: 4அத்தியாயங்கள் கொண்டது.இது. சிசுபாலன் வீடுபேறு, இரணிய வதம், இரணிய வதத்தின் பின்னர் பிரகலாதன் துதி 10 பாடல்கள் அமைகின்றன. அவற்றுள்,
- விழைவற வெறிந்தார் நாடும்
- விழுப்பெருஞ் சுடரே, தூய
- பழமறைக் கொழுந்தே, பச்சைப்
- பசும்புயல் வண்ணா, நின்னை
- வழிபடு மன்பே யன்றி
- வரமெவன் பெறுவ தென்னாத்
- தொழுதனன் வழுத்த லுற்றான்,
- தூயபே ரறிஞ னம்மா.
- பூவுறை மணம்போ லெல்லாப்
- பொருளிது முறைவாய், நின்பொன்
- சேவடி தொழுது போற்றார்
- தேவரே யேனும் நீசர்
- ஆவர்;பொல் லாத நீச
- ராயினும் வணங்கி நின்சீர்
- நாவினால் வழுத்தில் தேவ
- நாயகர் நாத ராவார்.
என்பவை இரண்டு பாடல்கள். தொடர்ந்து வருணாசிரமம், இல்லற இயல்பு இயம்பப் பெறுகின்றன.