பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ‌.இதிகாச பாகதம்


கொன்றை சூடும் குழகனும் இவ்வகை
ஒன்று காமம் உழந்தனன் என்னின்,யார்
வென்றி வேல்விழி யார்மயில் வெல்பவர்?

என்று வேந்துக் கிருந்தவன் ஓதினான்

என்பது காண்க.

ஒன்பதாம் கந்தம்: இதில் அடங்கியவை 18 அத்தியாயங்கள். சிவன், சையாதி, அம்பரீடன், இக்குவாகு, அரிச்சந்திரன், சகரன், பகீரதன், கன்மாடயாதன் இவர்களின் வரலாறுகள் வருகின்றன. அடுத்து இராமாவதாரமும், இராமன் தன்னுடைய அடிச்சோதிக்கெழுந்தருளிய வரலாறும், இராமாயணம் முழுமையும் 137 பாடல்களால் அமைகின்றன; தொடர்ந்து 16 பாடல்களில் உத்தர காண்டம் அமைகின்றது. நூல் கண்ணன் வரலாற்றை விரிப்பதாக அமைவதால் பிறவற்றின் விரிவுக்கு இவண் இடம் இல்லை. பின்னர் நிமி, சந்திரன், பரசுராம விசுவாமித்திரர், யயாதி, பூரு, சந்தனு, அனுமரபு, எதுமரபு ஆகியவை அமைகின்றன.

பத்தாம் கந்தம்: 54 அத்தியாயங்கள் கொண்டது. அனைத்துக் கந்தங்களிலும் பெரியது இது; 1682 பாடல்களைக் கொண்டது. இப்பகுதி கண்ணன் திருவவதாரம் முதல் கண்ணனுடைய இறுதிக் காலத்தில் துருவாசர் சாபத்தினால் யாதவர்கள் தங்கள் முடிவுக்குக் காரணமான இருப்புலக்கை பெறுகிற வரையில் உள்ள கிருட்டிணாவதாரக் கதையை விரித்துச் சொல்கிறது.கண்ணனுடைய பால விளையாட்டுகள் யாவும் தனித்தனி அத்தியாயமாக விரித்துப் பேசப்பெறுகின்றன. நூலுக்கு அமைந்த 'பாகவதம்' என்ற பெயரே இந்தக் கந்தத்தை வைத்தே வந்ததாகும். தேவகி கருவில் திருமால் தங்குகிறான். தேவகி திருவயிறு அந்த ஆலிலை போலும் உள்ளதாக நினைத்து வந்தனன் போலும். பூதனையின் பாலை அருந்த அவள் வீடுபேறு அடைகின்றாள். சகடத்தை உதைத்து சாக அடிக்கிறான். மண் அருந்தின கண்ணனை யசோதை வந்து பார்க்க, அவள் காண்பது என்ன?

27