பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறாவின் வைணவ புராணங்கள்


நப்பின்னை வரலாறு:ஆசிரியர் 36 பாடல்களில் நப்பின்னைப் படலம் என ஒரு படலம் அமைத்துள்ளார். நப்பின்னை வரலாறு தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பான வரலாறு. யசோதையின் தமையனாய் மிதிலையில் வாழ்ந்த கும்பகனுடைய பசுநிரையில் காலநேமி என்ற அசுரனின் புத்திரர் எழுவர் எருதின் உருவம் கொண்டு புகுந்து யாருக்கும் அடங்காது பேரின்னல் விளைத்து வந்தனர். அவற்றை அடக்குவார் யாரும் இலர். மிதிலை அரசனான வெகுலாசுவன் என்பவன் தன் சேனைகளைக் கொண்டு அடக்க முயன்றும் முடியவில்லை. "இந்த எருதுகளை அழிப்பவர்கட்கு என் மகள் நப்பின்னையை மணம் செய்து கொடுக்கிறேன்" என்று அவன் பறைசாற்ற வந்தோரெல்லாம் அந்த எருதுகளால்தாக்குண்டுமடிந்தனர். அதன்மேல் கும்பகன் நந்தகோபனுக்குச் சொல்லியனுப்ப, அவன் அங்கு வருகின்றான். உடன் வந்த அவன் மகனாகிய கண்ணபிரான் அந்த எருதுகளோடு போரிட்டு அவற்றை அழித்தனன். நப்பின்னை கண்ணனுக்கு மாலை இட்டாள். முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நப்பின்னை திருமணம் உருக்குமிணிப் பிராட்டியின் திருமணத்திற்கு முன் நிகழ்ந்தது. நப்பின்னையின் வரலாறு தமிழ் நாட்டில் வழங்கும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய காப்பியங்களும், தேவாரம், திருக்கோவையார் ஆகிய சைவ நூல்களும், ஆழ்வார் பாசுரங்களும் நப்பின்னையை கண்ணன் தேவியாகக் கூறுகின்றன. ஆண்டாள் திருப்பாவை 20-ஆம் பாசுரம் திருமாலைத் துயிலெழுப்புமிடத்து, "செப்பன்ன மென்முலை செவ்வாய்ச்சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவேதுயிலெழாய்” என்று கூறியிருத்தலைக் காணலாம். திருவள்ளுவ மாலை, "உபகேசி தோள் மணந்தான்”[1] என்று கூறும். நேமிநாதர் விருத்தி கூறும் பண்டைய தமிழ் இலக்கணத்தில் "ஏறு தழுவுதல்” என்ற ஒரு செயல் ஆயர்களிடையே திருமணத்துக்கு முன் நிகழ்வதாகச் சொல்லப் பெற்றுள்ளது.இதுவே பாகவதபுராணத்தில்"நப்பின்னைப்படலமாக” உருக்கொண்டது போலும் எனக் கருதலாம். நப்பின்னையின் பெயர் பின்னை 'ந'என்பது அடைமொழி, பின்னை, 'பிஞ்ஞை' என்னும் இலக்கியத்தில் வழங்கும்.


  1. 18 திருவள்ளுவ மாலை - 21 நல்கூர் வேள்வியார் பாடல்

54