பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.புராணபாகவதம்




ஆயும் மறையோ ரெண்ண வரும்சகாத்தம்
ஆயிரத்து நானுற்றோ டறுபத் தஞ்சாம்
தூயசுய கிருதுநாளின் முதன்மா தத்தில்
துலங்குகுரு வாரத்துத் திராட நாளில்
நேயமுடன் நெல்லிநகர் வரதராசன்
நிகரிலரங் கத்திலர வணையில ஓங்கும்
நாயகன்முன் அறிஞர்மகிழ்ந் திடவே வாசு
தேவகதை அரங்கேற்றி நலனுற் றானே.

என்பதில் காண்க. அரங்கேற்றிய காலம் சகாத்தம் 1465, அதாவது கி.பி. 1543, சுபகிருது ஆண்டு, சித்திரை மாதம், குருவாரம், உத்திராட நட்சத்திரம். ஆதலால் வாசுதேவ கதை செய்த வரதராசர் (அருளாளதாசர் காலம் 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி.

நூலகத்துள்ள மற்றொரு குறிப்பும் கருதத்தக்கது. தில்லை கோவிந்தராசர் துதிப்பாடல் (திருவரங்கப்படலம் - 68).

நச்சணி நகில்வீ றியஉமை கொழுநன்
நடஞ்செயக் கமலனோ டிமையோர்
நிச்சலும் முராரி தனைத்தொழும் பதியை
முன்புபோல் நிறுவிய நிருபன்
அச்சுத ராயன் வணங்கிட அரவின்
அழகிய தில்லையம் பதிக்கே
மைச்சுடர் வரைபோல் வயங்குகோ விந்த
ராயன்மா மலரடி வாழி.

இவண் குறிப்பிட்ட அச்சுதராயன் 1629-இல் விசய நகரப் பேரரசின் மன்னர் பதவி ஏற்றவன். இவன் காலத்தில் ஆசிரியர் நூல் செய்யத் தொடங்கி 1543-இல் முடித்தார் என்று தெரிகிறது.

67