பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைணவ புராணங்கள்



(3) திருக்குருகை மான்மியம்

ஆசிரியர்: இதன் ஆசிரியர் திருக்குருகைப் பெருமான் கவிராயர் என்பவர். இவர் நம்மாழ்வார்பிறந்த ஆழ்வார்திருநகரி என்ற திருக்குருகையில் வேளாள மரபில் பிறந்த ஒரு பெரும் புலவர். இலக்கணத்தில் மிகவும் வல்லவர். இவர் யாப்பு, பொருள், அணி என்ற மூன்றுக்கும் உரிய இலக்கணங்களும் அவற்றுக்கு உதாரணச் செய்யுட்களும் பாடிப் பெருமை பெற்றவர். இவற்றையெல்லாம் நம்மாழ்வார் பெயரிலேயே பாடியுள்ளார். யாப்புக்கு இவர் பாடிய இலக்கணம் மாறன்பா-பாவினம்’ என்பது பொருளுக்கு மாறன் அகப்பொருள் ஆகும். அதற்கு எடுத்துக்காட்டாகத் 'திருப்பதிகக் கோவை' அணி இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டாக மாறன் அலங்காரம்'. இவை யாவும் அச்சு வாகனம் ஏறியவை. இவர் திருக்குருகை மான்மியம் என்ற பெயரில் ஒரு புராணம் செய்தார்.இது நம்மாழ்வாரின் அவதாரத்தலமாகிய திருக்குருகூருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.

நூலுக்கு முன்னுரையாக சில சொற்கள். பெருங்காவியமாகிய இது முழுமையாகக் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்து, பதிகம் என்ற உறுப்புகளுக்குப் பின் 28 சருக்கங்கள் இருந்தன என்று உ.வே.சா. ஐயரவர்களின் ஏட்டுப்படியொன்றில் குறிப்பிடப்பெற்றுள்ளது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்ப் பத்திரிகைப் பிரசுரமாக இதன் பகுதி 1938 வரை பல ஆண்டுகள் வெளிவந்து 574 பக்கங்களில் முடிவடைந்தது. ஐயரவர்கள் உதவிய ஒரு கைப்படியில் 26-ஆம் சருக்கம் 33-ஆம் செய்யுள் வரையிருந்தது. பின் மாமணவாள ரங்காச்சாரியார் 83-88 பாடல்களைப் படியெடுத்துத் தொடுத்து அச்சருக்கம் முழுமை அடைந்தது. அடுத்த இரு சருக்கங்கள் மாறன் திருவவதாரச் சருக்கம், மவுன நீங்கு சருக்கங்கள் என்றும், மொத்தம் 3030 பாடல்கள் என்றும், ஐயரவர்களின் ஏட்டுப்பட்டியின் முகப்பேட்டில் கூறப்பெற்றுள்ளது. ஆனால் 26 வரம் பெறு சருக்கம் வரை பாடல்கள் 2621 மட்டுமே அச்சாயின. பின்னால் மாறன் திருஅவதாரச் சருக்கம் என்ற தலைப்பில் 48 பாடல்கள் அச்சாயின. ஆனால் இப்பகுதி மட்டும் தனியாக மாறன் திருவவதாரச் சரிதை' என்ற பெயரில் தனி வரலாறாகவும் ஏடுகளில் காணப் பெறுகின்றது.

68