இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முற்போக்கு இயக்கங்களின்
முன்னோடி
திலகரது உறுதியான கருத்து, “சிதம்பரம் பிள்ளை, தமிழ் நாட்டின் தலை சிறந்த வீரம் நிறைந்த விடுதலைப் போராட்ட வீரர்” என்பதாகும் என்று ராஜகோபாலச்சாரியார் 1903இல் எழுதினார்.
- சிதம்பரம் பிள்ளை மேன்மை தங்கிய மன்னர்பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். (இரு வர்க்கத்தார்—ஆங்கிலேயர், இந்தியர்) அவர் வெறுக்கத்தக்க ராஜத்துரோகி; அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப்பின் ராஜத் துவேஷத்தையூட்டும்
என்று பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி.யைப் பற்றித் திருநெல்வேலிக் கலகத்திற்குத் தலைமை தாங்கிய குற்றத்திற்காகத் தண்டனையளிக்கும் பொழுது தமது தீர்ப்பில் எழுதினார்.
பாரதி, விஞ்சுதுரை என்ற கலெக்டரோடு, வ.உ.சி. விவாதித்த நிகழ்ச்சியைக் கற்பனை கலந்து இரண்டு பாடல்களாக எழுதியுள்ளார். அவற்றுள், ஒரு பாடலில் விஞ்சுதுரை அடித்து, மிதித்து சிறைக்குள்ளே தள்ளுவேன் என்று மிரட்டுகிறான். அதற்குப் பதிலாக மற்றோர் பாடலில், அடித்தாலும், வெட்டி உடலைத் துண்டு துண்டாக்கினாலும் “இதயத்துள்ளே இயங்கும் மகாபக்தி ஏகுமோ—நெஞ்சம் வேகுமோ” என்று. வ. உ. சி. பதில் சொல்லுவதாக எழுதியிருக்கிறார்.