பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

19



அவரது தொழிலை விரிந்த அளவில் நடத்தக் கிராமமான ஒட்டப்பிடாரத்திலிருந்து, பல கோர்ட்டுகள் உள்ள தூத்துக்குடிக்குச் சென்று வாழத்தொடங்கினார். தமது தொழில் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் நகரம் தூத்துக்குடியே என்பதை அனுபவத்தில் கண்டார். இந்நகரில்தான், ஏழைஎளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடிய இளம் வக்கீல் சிதம்பரம்பிள்ளை, இந்திய தேசிய இயக்கம் என்னும் மாபெரும் பிரளயத்தோடு தொடர்பு கொண்டார். அவருக்குத் திலகர், அரவிந்தர், கார்பார்டே, மூஞ்சே, மண்டயம் சீனிவாசாச்சாரியார் (பாரதியின் நண்பர்), பாரதியார் ஆகிய சுதேசிகளின் நட்பு வாய்த்தது ('சுதேசி’ என்ற பெயர், வெள்ளைக்காரர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஏளனமாக வைத்த பெயர். அதுவே மக்களால் பெருமைக்குரிய விருதாகப் பின்னர் வழங்கப்பட்டது. ஏளனமாக வைத்த பெயர், பெருமைக்குரியதாக ஆகிவிட்டது). தங்கள் வாழ்க்கையைச் சுதந்திரப் போராட்டத்திற்கும் நாட்டுப் பணிக்கும் அர்ப்பணித்த இப்பெரியார்களது நல்லுறவால், சிதம்பரம்பிள்ளை சிறந்த தேசபக்தராக வளர்ச்சி பெற்றார்.

வ.உ.சி. தனது தூத்துக்குடி வாழ்க்கையின்போது பெற்ற நண்பர்களைக் குறித்துப் பின்வருமாறு எழுதினார்:

இவர்கள் எனது நண்பர்கள். இவர்களை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன். ஏனெனில் இவர்களுடன் எனக்குக் கருத்தொற்றுமை இருக்கிறது. இவர்களுடைய இலட்சியங்களை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். இவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டுப் பணிக்காக அர்ப்பணித்துள்ளார்கள். அவர்களைப் போலவே நானும் பணிபுரிய விரும்புகிறேன்.

சிதம்பரம் பிள்ளை, பாளையங்கோட்டை சண்முகம் பிள்ளை என்பவரின் உதவியுடன் பத்திரிக்கை ஒன்றை நடத்தினார். அதன் பெயர் ‘விவேகபானு’. இதன் பொருள் அறிவுக் கதிர் என்பது.

தமிழன்பர்கள் பலரோடு சேர்ந்து அவர் திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய இலக்கிய நூல்களையும், தொல்காப்பியம் என்ற பழமையான இலக்கண நூலையும் ஆழ்ந்து கற்றார். அரசியல் பேச்சுக்களில், இலக்கிய ரசனையுடன் கவர்ச்சிகரமாகப் பேசும் வல்லமை அவருக்கு வாய்த்தது. காவியங்களில் இருந்து மேற்கோள் காட்டாமல் அவர் அரசியல் பிரசாரம் செய்ததில்லை.