பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வ.உ.சி

ஏஜெண்டாகப் பணிபுரிய ஒப்புக் கொண்டார். பங்குதாரர்கள் தங்கள் நிபந்தனைகளை வற்புறுத்தவில்லை. இவர் விலகியிருந்த காலத்தில் பிரிட்டிஷ் கம்பெனியின் கப்பல்களில் பொருளேற்றிய பல இந்திய முதலாளிகளை மறுபடியும் சுதேசிக் கம்பெனியின் கப்பல்களில் பொருளேற்றும்படி வேண்டிக் கொண்டார். அவர்களும் அதற்கிணங்கினார்கள்.

அவர் கம்பெனியிலிருந்து விலகிவிட்டதையறிந்து பெருமகிழ்ச்சி கொண்டிருந்த பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் நிர்வாகிகள், மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதையறிந்து, கம்பெனியையும் அவரையும் ஒழித்துவிடத் திட்டமிட்டார்கள். அதற்கொரு வாய்ப்பும் கிட்டியது.

பிபின் சந்திர பாலர் என்னும் வங்காள நாட்டின் தலைவர் வங்காளப் பிரிவினையை எதிர்த்து நடந்த கிளர்ச்சியில் மக்களுக்குத் தலைமை தாங்கியதால், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்தார்கள். அவரது விடுதலையை 1908ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாட துரத்துக்குடியிலும் வேறு பல நகரங்களிலும் வ. உ. சி. ஏற்பாடு செய்தார்.

பணத்தாசை பிடித்த டைரக்டர்களுக்கும் பங்குதாரர்களுக்கும், சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி, வியாபாரத்திற்கு மட்டும் தோற்றுவிக்கப்பட்டதல்ல, அரசியல் மாற்றத்தின் கருவியாகவும் அது செயல்படவேண்டுமென்று வ. உ. சி. எழுதினார்.

மார்ச்சு 9 கொண்டாட்டத்தினால் எழுச்சி பெற்ற மக்களைத் தலைமை தாங்கி வழி நடத்துவதில் எத்தகைய தொல்லை வந்தாலும் ஏற்றுக்கொள்வதென வ. உ. சி. தீர்மானித்தார். கம்பெனி டைரக்டர்களின் எதிர்ப்பையோ, வெள்ளை அதிகாரிகளின் பயமுறுத்தலையோ கண்டு அவர் தயங்கவில்லை.

சுறுசுறுப்பாக மார்ச்சு 9ஆம் நாளைக் கொண்டாடத் தயாரிப்புகள் நடந்தன. மார்ச்சு 9 திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது. பத்தாயிரம் மக்கள் தாமிரவருணி பாலத்தடியில் கூடினர். தங்கள் அருமைத் தலைவர்கள் சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவாவையும் கேட்க அவர்கள் திரண்டிருந்தனர்.

சிவா–அரசியல் சன்னியாசி

சிவா சன்னியாசி உடையில் இருந்த அரசியல் தலைவர். அவர் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் பார்த்து வந்த வேலையை