பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

27

மிடிமையைத் தீர்ப்பது குற்றமல்ல; ஒற்றுமை வழியே எங்கள் வழி என்று தேர்ந்திட்டோம்; இனி உங்கள் கொடுமைக்கெல்லாம் மலைவுறோம் என்ற உறுதி பிறந்துவிட்டது.

இறுதியாக, விஞ்சின் மிரட்டல்களுக்குத் தேசபக்தன் பணியவில்லை. அவனது தேசபக்தி, மிரட்டல்களுக்கு அஞ்சாதவனாக அவனை மாற்றிவிட்டது.

சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ?—ஜீவன்—ஓயுமோ?
இதயத் துள்ளே இலங்கு மகாபக்தி
ஏகுமோ?—நெஞ்சம்—வேகுமோ?

என்று வீரமுழக்கம் செய்கிறான் தேசபக்தன்.

இவ்விரண்டு பாடல்களில் நாட்டுமக்களின் மனப்போக்குகள் மாறியுள்ளதைப் பாரதி சித்தரிக்கிறார். மாறிய உணர்ச்சி நிலையில் மக்கள் துப்பாக்கிக்கும் சிறைக்கும் அஞ்சவில்லை. அறிவு, துணிவையும் வீரத்தையும் விளைவிக்கிறது.

விஞ்சு ஓராண்டு நன்னடத்தை ஜாமீன் கேட்கிறான். சிதம்பரமும் சிவாவும் அவனது கோரிக்கைக்கு இணங்க மறுக்கிறார்கள். அதற்கிணங்காவிட்டால் மாவட்டத்திற்கு வெளியே சென்று வசிக்கும்படி கூறுகிறான். அதற்கும் இவர்கள் இணங்கவில்லை. விஞ்சு அவர்களை ஜாமீன் காலமாகிய ஓராண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் வசிக்கும்படி உத்தரவிடுகிறான்.

தீ பரவுகிறது

நெல்லையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த செய்தி நகர் முழுவதும் பரவியது. தேசபக்தர்கள் சிறை புகுந்ததை நெல்லை நகர மக்கள் அறிந்ததும் வெகுண்டெழுந்தார்கள். விஞ்சின் வரம்பு மீறிய செயலை, வேலை நிறுத்தங்கள், கோபாவேச ஊர்வலங்கள் மூலம் கண்டனம் செய்தார்கள். பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. போலீசார் மக்களின் மனத்தில் பயமூட்டுவதற்காக, நகரை வலம் வந்தார்கள். மக்கள் ஆவேசங்கொண்டு, அவர்களை லைனுக்குச் செல்லுமாறு விரட்டினார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் அறிகுறிகள் அனைத்தும் அவர்களது கோபத்திற்கு இலக்காயின. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக்கொடி இறக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நகர்மன்ற அலுவலகம் முதலியன தீக்கிரையாயின. கலெக்டரும் போலீஸ் சூபரின்