பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

29

மரியாதைக்குரிய சாட்சிகள் வழக்கில் சாட்சிகளாக வந்தனர். அவர்களுள் பாரதியாரும் ஒருவர். ஆனால் அரசாங்கமோ, போலீஸ் அதிகாரிகளையும் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி ஊழியர்களையுமே சாட்சிகளாகக் கொண்டுவர முடிந்தது. விசாரணைச் செய்திகள் இந்தியா முழுவதும் பரவியது. ‘யுகாந்தர்’ என்ற வங்காளி நாளேடு விசாரணை நடவடிக்கைகளைத் தினந்தோறும் வெளியிட்டது.

தீர்ப்பு

ஜூலை 7ஆம் நாள் நீதிபதி பின்கே தீர்ப்பை வாசித்தார். சிதம்பரம் பிள்ளைக்கு ராஜத் துரோகத்திற்காக 20 ஆண்டுகளும் அரசியல் குற்றவாளியான சிவாவிற்கு இடமளித்ததற்காக 20 ஆண்டுகளும் தண்டனையளித்தார். சிவாவிற்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

பொது மக்கள் எதிர்ப்பு

சிதம்பரம் பிள்ளைக்கு அப்பொழுது 35 வயது, தந்தையார் உயிர் வாழ்ந்திருந்தார். மனைவியும் இச்செய்திகேட்டு மூளைக் குழப்பமடைந்து, சாகும்வரை பைத்தியமாகவே வாழ்ந்தார். தந்தையும் தாயும் தீர்ப்பு நாளில் 20 ஆண்டுகள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்பட்டனர்.

இத்தீர்ப்பு வெளிவந்த வாரத்தில் பாலகங்காதர திலகர் ஆறு ஆண்டு சிறைவாசமும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். இத்தண்டனை திலகருடைய ஏடான கேஸரியில் ராஜத்துவேஷத்தன்மை கொண்ட ஒரு கட்டுரை எழுதியதற்காக அளிக்கப்பட்டது.

வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனை குறித்து ‘பெங்காளி’ என்ற ஏடு கீழ்க்கண்டவாறு எழுதியது:

ஒரு நாகரிக ஆட்சி, பின்கேயின் அரசியல் இலட்சியங்களை ஏற்க மறுக்கும் நாள் மிகநல்ல நாளாகும். சுதேசிக் குறிக்கோளுக்காகப் பணிபுரிவது குற்றமென்றால் இந்திய மக்கள் முப்பது கோடிப்பேரும் குற்றவாளிகளே.

‘அம்ருத்பஸார்’ ஏடு எழுதியது:

விடுதலை வேட்கையை வெளியிட்டதற்கு இரண்டு ஆயுள் தண்டனைகள்!
ஸ்ரீ பிள்ளையைத் தவிர வேறு யாருக்கும் இந்த அநீதி இழைக்கப்பட்டதில்லை. நமது தேசிய வீரரின் தியாகத்தின் முன் நாம் தலை வணங்குகிறோம். விடுதலை பெற