பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

35

அவரது விசுவாசமிக்கப் போராட்டத் தோழர் சிவாதான். சேலம் சிறையில் அவருக்குப் பெரும்வியாதி கண்டதால் விடுதலை செய்துவிட்டார்கள். அவர் சேலம் மாவட்டத்தில் சுதேசி இயக்கத்தில் பல இன்னல்களை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரைச் சிறைவாயிலில் வரவேற்க வந்தவர் அவர் ஒருவர்தான்.

மனஞ்சோர்ந்துவிடாமல் அவர் சென்னையில் தங்கினார். அங்கு தன்னைப் போலவே ஊக்கத்தோடு தேசப்பணியிலும், தொழிற்சங்கப் பணியிலும் ஈடுபட்டிருந்த சக்கரைச்செட்டியார், சிங்காரவேல செட்டியார். இன்னும் அணையாத புரட்சிக்கனலாக ஒளிர்ந்து கொண்டிருந்த பாரதியார் ஆகியவர்களோடு தொடர்பு கொண்டார். தமது செல்வமனைத்தையும் நாட்டுப் பணிபுரியும் தொண்டர்களுக்காகவே செலவிட்ட மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார் சென்னையில் தான் வாழ்ந்து வந்தார். அவருடைய பண உதவியும் கிடைத்தது. வ. உ. சி. தமது கோரல் மில் தொழிற்சங்க அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டு தொழிற்சங்கத் தலைவர்களோடு சேர்ந்து பணிபுரிந்தார். சென்னைத் தொழிலாளர் சங்கம் (M.L.U.) மற்றும் பல தொழிற்சங்கங்களை அமைப்பதில் அவர்களுக்குத் துணைபுரிந்தார். தமது கூட்டுறவு இயக்க அனுபவத்தைப் பயன்படுத்தி, சென்னையில் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்தார். ஏழை எளிய மக்களையும் கூட்டுறவு இயக்கத்தில் சேரச் செய்தார்.

அவருக்கு வருமானம் எதுவுமில்லை. வழக்கறிஞராகத் தொழில்புரிய முடியாதபடி சன்னது பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. பல வழிகளில் உலக வாழ்க்கையை நீந்த முயன்றார். மளிகைக்கடை வைத்துப் பார்த்தார். வெற்றி பெறவில்லை. மண்ணெண்ணெய்க்கடை வைத்தார். அதிலும் இழப்பு.

இவரை ஒருமுறை விடுதலை செய்த வாலஸ் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதியாயிருந்தார். சன்னதைத் திரும்பத் தருமாறு அவருக்கு விண்ணப்பித்தார். வாலஸ் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, சன்னதைத் திருப்பிக் கொடுத்து வழக்கறிஞராகப் பணிபுரிய அனுமதித்தார்.

சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருக்கும்பொழுது வையாபுரிப்பிள்ளை, செல்வ கேசவராய முதலியார், பாரதியார், உ.வே.சாமிநாதய்யர் முதலிய தமிழ்ப் புலவர்களோடு அடிக்கடி இலக்கிய ஆய்வுகள் நடத்துவார். அக்காலத்தில் சில பண்டைய நூல்களை இவர் பதிப்பித்தார். திருக்குறள் அறத்து பாலை ஆய்வுரையோடு பதிப்பித்தார்.