பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வ. வே. சு. ஐயர்


இவை எல்லாவற்றையும் கண்ட கிறித்துவப் போலீஸார், நமது நாட்டில் மரணமடைந்து விட்டால் இப்படியெல்லாம் ஆடிப்பாடிச் சடங்குகள் செய்வதில்லையே என்று நினைத்து, தமிழ்ப் பிணம் சுடுகாடு போகும் கடைசிக் காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். போலீசாரிலே ஒருவர் பிணம் புதைக்கும் இடுகாடு எங்கே என்று கேட்டார். அதற்குக் கிராமத்து மணியக்காரர். தமிழ் நாட்டில் சிலர் பிணத்தைப் புதைப்பார்கள்; பலர் எரித்து விடுவார்கள். இந்தப் பிணம் வயது மூத்த பிணம் எரிக்கப்படும். அதோ நெருப்புச் சட்டி என்று கொள்ளி போடுபவன் கையிலே இருந்த நெருப்புச் சட்டியைக் காட்டினார்!

சவ ஊர்வலம் புறப்பட்டது! தாரை தப்பட்டைகள் வேகமாக, ஒலித்தன! சங்கும் சேமகண்டமும் வாசிக்கப்பட்டது. பண்டாரம் திருவாசகம் பாடியபடியே அவரவர்களிடம் காசு பெற்று, அவர்கள் பெயரைக் கூறி வாழ்த்திக் கொண்டே நகர்ந்தான்.

சவ வீட்டிலே எல்லாம் பெண்களாகவே இருந்ததால் உள்ளே சென்று விசாரிக்க அச்சப்பட்டு, போலீசாரும் பிண ஊர்வலம் பின்னாலே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

நூறு பேர்களுக்கு மேல் கும்பலாக வந்த கூட்டத்தில், அரிச்சந்திரன் கல்லருகே பிணம் வந்த போது, பத்து பன்னிரண்டு பேரே இருந்தார்கள். அவர்கள் முகங்களை எல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு, ஐயரைக் காணாமையால், ஒற்றர்கள் தந்த செய்தி தவறு என்று எண்ணி, தங்களது ஜீப்பிலே ஏறிக் கொண்டு போலீசார் சென்று விட்டார்கள்.

சுடுகாடு வந்தடைந்தது சவம் பாடையைவிட்டு இறக்கிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, வேக வேகமாக வந்த ஒருவர், எல்லா போலீசாரும் ஜீப் வண்டியிலே ஏறிக் கொண்டு போய்விட்டார்கள் என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/10&oldid=1080552" இலிருந்து மீள்விக்கப்பட்டது