பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

13


அந்தச் சங்கங்கள் ஒவ்வொன்றிலும் எண்ணற்ற இளைஞர்கள் உறுப்பினரானார்கள். அவர்கள் உடற்பயிற்சி, குஸ்தி, மல்யுத்தம், வேல்கொம்புச் சண்டை ஒத்திகைகளை நாள்தோறும் நடத்தினார்கள். இன்னும் தீவிரமாகச்சொல்வது என்றால், குத்துச்சண்டை, வாட்போர், குதிரையேற்றம், குறிபார்த்துக் குண்டுவீசுதல், துப்பாக்கி ஏந்திச் சுடுதல் போன்ற வீராவேசக் கலைகள் வேறு என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் ஒத்திகை நடத்திப் பயிற்சி பெற்றார்கள்.

கல்கத்தா நகரிலே உள்ள காளிகோயிலுக்குள் சென்று, வாளால் தங்கள் மார்பைக் கிழித்து ரத்தம் எடுத்து, அதைக் கையிலே தேங்க வைத்து, தாயே! என் தாய் நாடான இந்தியாவை வெள்ளையர்களிடம் இருந்து விடுவித்திட எங்கள் உடலுக்கும், நெஞ்சுக்கும் உரம் தா! அதற்காக எமது இன்னுயிரையும் தரத் தயார் இதோ காணிக்கையாக்குகின்றோம் என்று காளிதேவி முன்பு அவரவர் குருதியைக் கொட்டி அர்ப்பணித்தார்கள்; சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த வாலிபர்கள் வெறும் சூளுரை ஏற்றுக் கொண்டதோடு மட்டும் நிற்கவில்லை. எப்போது? எங்கே? வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்! இங்கிலீஷ்காரர்களைப் பழிக்குப் பழிவாங்கும் திட்டத்தை இந்தியாவிலே மட்டுமன்று, வேறு எந்த நாடானாலும் அங்கேயும் சென்று நீண்ட நாட்களானாலும் தங்கிப் பழிவாங்கவும் தயாராகி ஒவ்வொருவராக ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று கொண்டே இருந்தார்கள். அதே நேரத்தில், ஆங்கிலேயனைத் தனிப்பட்ட நிலையிலும், குடும்பத்தோடும் கொன்று குவித்து, இங்கிலீஷ் பிறவிகளின் கரு உருக்களை அழிப்பது என்ற கடுங்கோய வஞ்சத்துக்கு அந்த இளைஞர்கள் தோள்தட்டிப் புறப்பட்டுவிட்டார்கள்.

யார்யார் இங்கிலீஷ்காரனுக்கு வால் பிடித்து ஜால்ரா தட்டினானோ, அவனையெல்லாம் கூட ஒழிப்பது என்ற முடிவுக்கு அந்த இளைஞர்கள் தள்ளப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/15&oldid=1080628" இலிருந்து மீள்விக்கப்பட்டது