பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

25


 அதனால் மிஷினரி பள்ளிகளில் லத்தீன் இரண்டாவது பாட மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. சுப்பிரமணியனும் லத்தீன் மொழியிலே நன்கு தேர்ச்சி பெற்றார்.

ஆனால் இதில் என்ன ஒரு விதி விலக்குத் தெரியுமா? ஆங்கிலத்திலேயும், லத்தீன் மொழியிலேயும் நல்ல புலமை பெற்ற சுப்பிரமணியம், இன்றைய தாய்மொழித் துரோகக் கூட்டத்தைப் போல, தனது தாய் மொழிக்குத் துரோகம் செய்யாமல், தமிழையும் நன்றாகக் கற்றுப் புலமையறிவு பெற்றார். இதற்குச் சான்றாக அவர் எழுதிய நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், வரலாற்று ஆய்வு நூல்களையும் படித்தாலே புரியும்.

அக்காலத்திலே பல மொழிகளையும் படித்துப் புலமை பெற வேண்டும் என்ற எண்ணம் கல்வியாளர்கள் இடையே இருந்து வந்தது. அதற்குரிய காரணம் என்னவென்றால், இக்காலத்தில் உள்ளது போல அக் காலத்தில் அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், மருத்துவம், வணிகம் போன்ற பாடங்கள் வளர்ச்சி பெறவில்லை. அக் காரணத்தால் மொழிகள், வரலாறு, புவியியல், தத்துவம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளை மட்டுமே அக்கால மாணவர்கள் கற்க வேண்டிய அவசிய நிலை இருந்தது. அதனால், மாணவர்களில் பலர் பல மொழிகளை சிரமம் பாராமல் படித்து அதன் சிறப்புக்களை உணர்ந்தார்கள்.

எதை அக்கால மாணவர்கள் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்துவந்தார்களோ, அவற்றுக்காக மொழிகள் சிலவற்றையும் அத்துடன் சேர்த்தே கற்று வந்தார்கள். அவ்வாறு படிப்பதை ஒரு பெருமையாகவும் அவர்கள் மதித்தார்கள்.

அந்தக் கல்வி நிலைக் கேற்ப, சுப்பிரமணியனும் கற்றார். அத்துடன், சமஸ்கிருதம், இந்துஸ்தானி, ஆங்கிலம், லத்தீன், தமிழ் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுப் புலமையடைந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/27&oldid=1080974" இலிருந்து மீள்விக்கப்பட்டது