பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

27


அம்மையாரும் கேள்விப்பட்டு சொல்லொணா மகிழ்வு அடைந்தது மட்டுமன்று, எதற்காக நாம் பாடுபட்டோமோ அந்தக் கஷ்டத்திற்குக் கடவுள் கைமேல் பலன் தந்துவிட்டார் என்று பேரானந்தப் பட்டார்கள்.

அக்காலத்து பழக்க வழக்கத்தின்படி படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அவருக்குக் கலியாணம் செய்து விடுவது என்று பெற்றோர் முடிவெடுத்தார்கள். பெற்றோர் மனதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் பண்பு கொண்ட அவர், அவர்களது முடிவுக் கேற்றவாறு திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் தந்தார். சுப்பிரமணியனுக்கும் பாக்யலட்சுமி என்ற மங்கைக்கும் திருமணம் நடந்தேறியது.

திருமணமாகிவிட்டது. இனிமேல் குடும்பக் காரியங்களைக் கவனிப்பதும், மனைவி மனதுக்கு விரோதமாக நடந்து கொள்ளாமல் இருப்பதும்தான் வாழ்க்கை என்று சுப்பிரமணியம் எண்ணாமல், பி.ஏ. வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். திருமணத்துக்கு முன்னால் எவ்வாறு கல்வியினை அல்லும் பகலும் அரும்பாடு பட்டுப் படித்து வந்தாரோ, அதனைப்போலவே திருமணத்துக்குப் பின்பும் அயராமல், தளர்ந்துவிடாமல் கல்வியிலே மிக ஆழமாகக் கவனம் செலுத்திப் படித்து வந்தார். ஆனால், எதிர்பாராமல் வந்த நோயால் உடல் பாதிக்கப்பட்டார்.

நோயினால் ஓராண்டு அவதிப்பட்டார். பிறகு, பெற்றோர்களது உதவியாலும், மருத்துவச் சிகிச்சையினாலும் நோயிலே இருந்து மீண்டார். மறுபடியும் கல்லூரியிலே பி.ஏ. வகுப்பிலேயே சேர்ந்து படித்தார். விடாமுயற்சியோடும், மனைவியின் ஒத்துழைப்போடும் 1899-ஆம் ஆண்டில் நடந்த பி.ஏ. தேர்வில் கலந்து கொண்டு பி.ஏ.பட்டம் பெற்றார். இதனைக் கண்டு அவரது பெற்றோரும், மனைவியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/29&oldid=1081066" இலிருந்து மீள்விக்கப்பட்டது