பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

வ.வே.சு.ஐயர்


தந்தை வேங்கடேச ஐயர், தமது மகனை எப்படியாவது வழக்குரைஞராக்கி விட வேண்டும். என்ற உறுதியோட்டிருந்தார். அதனால், தனது மகன் ஏராளமாகச் சம்பாதிப்பார் படிப்புக்காகப் பெற்றிருந்த கடனைத் தீர்த்து விடலாம். நமது குடும்ப வாழ்க்கையும் முன்னேறும் என்று நம்பியபடியே சிந்தித்தார்.

மகன் வழக்குரைஞராவதானால், அவன் சென்னை சென்று தங்கிச் சட்டக்கல்லூரியில் சட்டத் துறை பி.எல். கல்வியைப் பயிலவேண்டும். அதுவும் ஓராண்டல்ல. இரண்டாண்டு காலம் சென்னையிலேயே தங்க வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்துக் குழப்பமடைந்தார்.

என்ன ஆனாலும் சரி, எவ்வளவு செலவானாலும் சரி, எப்படியும் சுப்பிரமணியத்தைச் சட்டக் கல்லூரியில் சேர்த்து விட சிலருடைய உதவிகளை நாடினார். அவ்வுதவிகள் அவருக்குக் கிடைத்துவிட்டது. அதனால், தனது மகனைச் சென்னைக்கு அழைத்து வந்து சட்டக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சட்டத்துறையின் நுட்பங்கள், சிந்தனைக்கு வேலை கொடுக்கும் சம்பவ நடப்புக்கள், சட்டங்களின் மூலம் செய்யக் கூடிய பணிகள், ஆகிய அனைத்தும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர், ஆர்வத்துடன் தொடர்ந்து படித்தார். அதே நேரத்தில் தனது தந்தையாருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்க மனமில்லாமல், தனது குடும்பநிலையினை நினைத்து, மிகவும் சிக்கனமாகவே சென்னையில் தங்கி மிகக் கடுமையாக, இரவு-பகல் என்று பாராமல் உழைத்துப்படித்தார்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்ற சங்க காலத்துச் சான்றோர் எண்ணப்படி, உண்மையோடும், உறுதியோடும், உணர்ச்சியோடும், படித்து இரண்டாண்டு கால சட்டப்படிப்பை முடித்து. தேர்விலே வெற்றி பெற்று வ.வே.சுப்பிரமணியன் பி.ஏ.பி.எல் என்று பட்டத்தைப் பெற்று வழக்கறிஞர் ஆனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/30&oldid=1081213" இலிருந்து மீள்விக்கப்பட்டது