பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

37


அத்தகைய ஓர் அறவாணனைக் குமுறும் எரிமலையாக்கி, கொந்தளிக்கும் ஊழிக் கடலாக்கி, அவரை நாடு நாடாகச் சுற்றிடும் நாடோடியாக்கி, அயல் நாட்டு வீதிகளிலே ஆபத்துமேல் ஆபத்துக்களை உருவாக்கி அலைய வைத்து, அவமான வாழ்க்கையை அனுபவிக்க வைத்து வேடிக்கை பார்த்து விளையாடி விட்டது அவருடைய ஊழ்!

பாரிஸ்டர் பட்டம் பெற்று வருவாயைப் பெருக்கி தனது குடும்பத்தை வாழவைக்க நினைத்து லண்டன் சென்ற வ.வே.சு.ஐயர், அதை மறந்து, இந்திய சுதந்திர உணர்ச்சியை அவரது நெஞ்சிலே நெருப்பாக்கி, அவரைப் புரட்சி வீரராக்கிவிட்டது அவரது ஊழ்!

பாரிஸ்டர் பட்டம் பெறச்சென்ற வ.வே.சு. ஐயர், இந்திய சுதந்திரப் போர் வீரரானார்! அந்தப் போராட்டத்தை நடத்தும் தளபதிகளிலே ஒருவரானார்! இந்தியச் சுதந்திரப் போர்த் தளபதிகளிலே ஒருவரானார்! என்றாலும், அந்த உணர்ச்சியாவது அவரை, அவரது வாழ்விலே வளமாக உயர்த்தியதா என்றால் அதுவுமில்லை. இறுதியாக, ஆற்றோடு ஓடும் நீரிலே மூழ்கிப் பரிதாபமாகச் சாகும் மரண அவல நிலையைத்தான் அளித்தது அவரது ஊழ். அந்த வேதனையான வரலாற்றை இனிக் காண்போம்!

இலண்டனுக்குப் பாரிஸ்டர் பட்டம் பெறச் சென்ற வ.வே.சு.ஐயர், தனது மைத்துனர் பசுபதி உருவாக்கிக் கொடுத்த உண்டியல் கடைத் தொழிலை ஏற்றார். பிறகு, புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் சட்டக் கல்லூரியிலே சேர்ந்து. பார்-அட்-லா கல்வியைக் கற்கலானார்.

வ.வே.சு.ஐயர், லண்டனுக்குச் செல்வதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்புதான், இந்தியாவிலே அரசப்பிரதி நிதியாக இருந்த லார்டு கர்சான் என்ற ஆங்கிலேயே ஆட்சி வெறியர், வங்காள மாநிலத்தை இரண்டு துண்டாகப் பிரித்தார். அதை இந்தியாவே எதிர்த்தது. வங்காள வாலிபர்கள் அதனால் பயங்கரவாதிகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/39&oldid=1082603" இலிருந்து மீள்விக்கப்பட்டது