பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வ.வே.சு.ஐயர்


50 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், 1907-ஆம் ஆண்டு ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா லண்டனிலே உள்ள ‘இந்தியா விடுதி’யில் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. இந்தச் சம்பவத்தின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொண்ட லண்டன் ஆசியப் போலீஸ், அன்று முதல் ‘இந்தியா விடுதி’ சம்பவங்களைக் கூர்ந்து கவனித்து வந்தது.

சாவர்களின் இவ்வளவு விவரங்களையும், எப்படிப்பட்ட கால கட்டத்தில் வ.வே.சு. ஐயர் பாரிஸ்டர் பட்டப் படிப்புப் படிக்க லண்டன் வந்தார் என்பதையும், லண்டன் வருவதற்கு முன்பு தீவிரவாதியாகவோ, வன்முறைவாதியாகவோ இருக்கவில்லை; என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகவே குறிப்பிட்டோம்.

எனவே, இப்படிப்பட்ட காலகட்டத்திலே, சாவர்களின் தீவிரவாத சுதந்திர உணர்ச்சிகள் ஆலமர விழுதுகளைப் போல வேரூன்றிய நேரத்திலே தான், வ.வே.சு. ஐயர் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் வந்து சேர்ந்தார். சட்டக் கல்லூரி உணவு முறைகள் ஐயருக்குப் பிடிக்கவில்லை. அதனாலும், இந்தியா விடுதியில் இந்திய முறையில் உணவு வகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தாலும், அவர் இந்தியா விடுதியிலே தங்குவதற்காக வந்தார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? வ.வே.சு. ஐயர் இந்தியா விடுதியிலே என்று காலடி வைத்தாரோ, அன்று முதல் ஐயரின் போக்கிலே ஒரு புது மாறுதல் உருவானது.

சாவர்கரின் நாவன்மைக்கு ஐயர் உணர்ச்சி அடிமையானது! அதாவது தேசபக்தராக அவரை மாற்றிவிட்டது. ஏன் லண்டன் வந்தோம் என்பதை அவர் அடியோடு மறந்தார் லண்டனுக்கு அவர் வருவதற்கு முன்பு, தனது குடும்ப நிலை என்ன, என்பதைச் சிந்திக்க மறந்து அவர் தீவிர தேசபக்தரானார். இதுதான் அவரது ஊழ்வினையோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/44&oldid=1082611" இலிருந்து மீள்விக்கப்பட்டது